கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்

தினமலர்  தினமலர்
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பதவி கிடைக்காதவர்கள் போராட்டம்

பெங்களூரு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, பா.ஜ.,வின், 16 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சுயேச்சை, எம்.எல்.ஏ., என, 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவி கிடைக்காத, 20க்கும் மேற்பட்டோர், கட்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர்.



கர்நாடகாவில் நடந்து வந்த, குமாரசாமி தலைமையிலான, ம.ஜ.த., - காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தியினால், இரு கட்சிகளையும் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களில் ஒரு பிரிவினர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து நடந்த, நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல், ஜூலை, 23ல், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

அமைச்சர் பதவி கிடைக்காத, பா.ஜ., – எம்.எல்.ஏ., திப்பா ரெட்டியின் ஆதரவாளர்கள், நடுரோட்டில், டயரை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இடம்: சித்ரதுர்கா.



இதையடுத்து, எடியூரப்பா தலைமையில், அதே மாதம், 26ல், பா.ஜ., ஆட்சி அமைத்தது; ஆனால், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இந்நிலையில், மூன்று வாரங்கள் கழித்து, அமைச்சர்கள் பதவியேற்க, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒப்புதல் வழங்கினார். இதன்படி, நேற்று காலை, 10:30 மணிக்கு, பெங்களூரு ராஜ்பவனில், அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடந்தது.

கடந்த முறை, பா.ஜ., ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த, 13 பேரும், புதிதாக நால்வரும், அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு, கர்நாடக கவர்னர், வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இந்நிலையில், பதவி கிடைக்காத அதிருப்தியாளர்களின் ஆதரவாளர்கள், போராட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மூலக்கதை