அனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்

தினமலர்  தினமலர்
அனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்

காஞ்சிபுரம்:காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், அருள்பாலித்து வந்த அத்தி வரதர், அனந்த சரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் நீராழி மண்டபத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஸ்தாபனம் செய்யப்பட்டார்.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அத்தி வரதர், 31 நாட்கள் சயன கோலத்திலும், 16 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை, அத்தி வரதரை, வரதராஜ பெருமாள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ்பபெருமாள் கோவில் வளாகத்தில் அத்தி வரதர், 48 நாட்களுக்கு பின் மீண்டும் எழுந்தருளிய அனந்த சரஸ் குளத்து நீராழி மண்டபம்.



நிவேதனம்



அதை தொடர்ந்து, அத்தி வரதரை, அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு, 12 வகையான சாதங்கள், 12 வகையான பலகாரங்கள், பருப்பு, பாயசம் ஆகியவை, நிவேதனமாக படைக்கப்பட்டன.பின், சந்தனம், சாம்பிராணி, வெட்டிவேர், பச்சைக்கற்பூரம் போன்ற பொருட்கள் கலந்து, அத்தி வரதர் மேனியில் பூசப்பட்டது; இதை, தைலகாப்பு அணிவித்தல் என்பர்.

� அனந்தசரஸ் குளத்தில், அத்தி வரதர், ஸ்தாபனம் செய்ய எடுத்து செல்லப்பட்டார். � இந்நிகழ்வில் குழுமியிருந்த, பட்டாச்சாரியார்கள், அதிகாரிகள், போலீசார்.


நிவேதனம் செய்யப்பட்ட பின், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அத்தி வரதரை ஸ்தாபனம் செய்ய, நேற்று முன்தினம், இரவு, 11:35 மணியளவில், கோவில் வசந்த மண்டபத்திலிருந்து, வெளியே எடுத்து வரப்பட்டார்.வேதங்கள் பாடி, மங்கள வாத்தியங்கள் முழங்க, 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியர்கள், அவரை சுமந்து வந்தனர்.



அனந்தசரஸ் குளத்திற்கு, நள்ளிரவு, 12:25 மணியளவில் சென்று, அங்குள்ள நான்கு கால் நீராழி மண்டபத்தில், அவரை ஸ்தாபனம் செய்தனர்.மேற்கு திசையில் தலைப்பகுதியும், கிழக்கு பகுதியில் கால்பகுதியும் இருக்கும்படி வைக்கப்பட்டது. அத்தி வரதருடன், 18 நாக சிலைகளும் வைக்கப்பட்டன.

கலெக்டர் வளாகத்தில், அத்தி வரதர் வைபவம் நினைவாக 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகளை நடும் பணியை, கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்.



கல்வெட்டு



கடந்த, 1979ல், அத்தி வரதரை வெளியில் எடுக்கும் போது அணிவிக்கப்பட்ட, வெள்ளி நாமம், பூணுால், திருமார்பில் அணிவிக்கப்பட்டிருந்த லட்சுமி உருவம் பொறித்த டாலர், தற்போதும், அப்படியே வைக்கப்பட்டுள்ளன.நடப்பு, 2019ம் ஆண்டில், அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதாக, நீராழி மண்டபத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அனந்தசரஸ் குளத்தில் உள்ள, வராகர் மற்றும் சர்க்கரை தீர்த்தம் கிணறுகளின் நீரை, மோட்டார் மூலம் இறைத்து, நீராழி மண்டபத்திற்குள் நிரப்பினர்.

இந்நிகழ்வின்போது, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன், அத்துறை செயலர், பணீந்திர ரெட்டி, கலெக்டர், பொன்னையா, உயர் நீதிமன்ற கமிட்டி குழுவினர், போலீஸ் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.வைபவத்திற்காக, போலி, 'டோனர் பாஸ்' அச்சடித்து விற்பனை செய்த, காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியை சேர்ந்த செந்தில், 34, ஒலிமுகமதுபேட்டை நவ்சாத், 34, உட்பட, 11 பேரை, விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர். வைபவத்தில், ஏ.டி.ஜி.பி., தலைமையில், ஐ.ஜி., - டி.ஐ.ஜி., - எஸ்.பி., - டி.எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் பணியாற்றினர்.

வைபவம் முடிந்ததும், பணியில் இருந்து, போலீசார் விடுவிக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இப்பணியில் ஈடுபட்ட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருக்கும், நேற்று மற்றும் இன்று என, இரு நாட்களுக்கு, விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உண்டியல் வசூல் ரூ.8 கோடி!



கோவில் வளாகத்தில் நிரந்தர மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், சுகாதாரம், அன்னதானம் என, ஏராளமான நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. இந்த செலவினங்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திற்கு, 44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. குளம் பராமரிப்பு, கோவில் வாசலில் நடை பாலம் அமைத்தது போன்ற பணிகளை, தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. உண்டியல் வசூலாக, 8 கோடி ரூபாய், கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்துள்ளது. சகஸ்ர நாமம் அர்ச்சனைக்கான, 500 ரூபாய் டிக்கெட், விரைவு தரிசனத்துக்கு, 300 ரூபாய் டிக்கெட் விற்றதில், 2.5 கோடி ரூபாயும், அன்னதானத்துக்கு, 1.5 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 ஆயிரம் அத்தி மரம்



அத்தி வரதர் வைபவம் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் புகைப்படம், வீடியோ மற்றும் கோப்புகளை, ஆவணம் செய்ய உள்ளது. இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், அத்தி வரதர் வைபவம் நினைவாக, மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், 204 இடங்களில், 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடும் பணியை, கலெக்டர் வளாகத்தில், கலெக்டர், பொன்னையா, நேற்று துவக்கி வைத்தார்.

மூலக்கதை