12 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை ...வாய்ப்பு!

தினமலர்  தினமலர்
12 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை ...வாய்ப்பு!

சென்னை:'தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், இன்றும், நாளையும் மழை பெய்யும்; 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலுார் ஆலங்காயத்தில், ஒரே நாளில், 15 செ.மீ., மழை பெய்தது. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, வட மாவட்டங்களின் வறட்சி நிலை மாறுகிறது. தொடர் மழையால், பல பகுதிகளில் ஏரிகள் நிரம்புவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, வட மாநிலங்களிலும், தெற்கில், கேரளா மற்றும் கர்நாடகாவிலும், வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக தமிழகத்திலும், தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்க்கிறது.


வெள்ளம்



ஏற்கனவே, கர்நாடகாவில் பெய்த மழையால், அணைகள் நிரம்பி, காவிரியில், தமிழக பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கேரளாவில் பெய்த மழையால், கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள, அணைகள் நிரம்பியுள்ளன.மழையின்றி வறட்சியில் தவித்த வட மாவட்டங்களில், மூன்று நாட்களாக, பரவலாக மழை கொட்டுகிறது. தமிழகத்தின் வடகிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள, வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை கொட்டி வருகிறது.

நீர் வரத்து



வேலுாரில், நேற்று முன்தினம் காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், 17 செ.மீ., மழை பெய்தது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், வேலுார் அருகேயுள்ள ஆலங்காயத்தில், 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.பல மாவட்டங்களில் பெய்யும் மழையால், ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

இந்த மழை, அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது, இன்றும், நாளையும் தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:தமிழக வளி மண்டல பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

கனமழை



வேலுார், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கடலுார், நாகை, திருவாரூர் ஆகிய, 12 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மழை எவ்வளவு?

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கடந்த, 24 மணி நேரத்தில், வேலுார் ஆலங்காயம், 15; திருப்பத்துார், 10; திருப்புவனம், திருச்சுழி, வாணியம்பாடி, 9; ஆம்பூர், 8; மதுராந்தகம், புதுச்சேரி, 7; ஸ்ரீபெரும்புதுார், சாத்துார், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.திண்டிவனம், செங்கல்பட்டு, 5; ஒட்டப்பிடாரம், செஞ்சி, உசிலம்பட்டி, செய்யார், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, போளூர், பரங்கிப்பேட்டை, கடலுார், திருவள்ளூர், தாம்பரம், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில், 3 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.

மூலக்கதை