ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல்

''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, பல நாடுகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும். ''பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகள் இடையிலும் கூட்டு முயற்சி தேவை. பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்,'' என்று, லிதுவேனியா சென்றுள்ள, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

ஐரோப்பிய நாடான லிதுவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லிதுவேனியாவுக்கு சென்றுள்ளார். தலைநகர், வில்னியஸில், லிதுவேனிய அதிபர், கிதானஸ் நவ்செடாவை நேற்று சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து, இருவரும் விவாதித்தனர்.

ஒப்பந்தங்கள்



இந்த சந்திப்பின்போது, வேளாண் துறை மற்றும் கலாசார பரிமாற்றம் தொடர்பாக, இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது பிரிவை நீக்கியது தொடர்பாக, வெங்கையா நாயுடு விளக்கினார். ''இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. ''நாட்டை ஒருமைப்படுத்தும் வகையில் எடுத்துள்ள இந்த முடிவுக்கு, மற்ற நாடுகள் ஆதரவு தர வேண்டும்,'' என, வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

'பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இதை ஒடுக்குவதற்கு, அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை, தனிப் படுத்த வேண்டும்' என்றும், வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். இந்தப் பிரச்னை தொடர்பாக, சர்வதேச மாநாடு நடத்த வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு ஆதரவு தர வேண்டும் என, லிதுவேனிய அதிபரை அவர் கேட்டுக் கொண்டார்.இந்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்தற்காக, நன்றியையும் அவர் தெரிவித்தார்.

உறவு வலுப்பெறும்



லிதுவேனியாவில், இந்திய துாதரகம் துவக்குவதற்கு, அந்நாட்டு அதிபர் கிதானஸ் நவ்செடா கேட்டுக் கொண்டார். இதன் மூலம், இரு நாடுகள் இடையே, உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, அதிக நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, ஐ.நா.,வில், இணைந்து வலியுறுத்துவது என, இரு தலைவர்களும் முடிவு எடுத்துள்ளனர்.

இந்தியா மற்றும் லிதுவேனியாவுக்கு இடையே உள்ள, நாகரிக தொடர்புகள் குறித்தும், லிதுவேனிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும், வெங்கையா நாயுடு விளக்கினார். லிதுவேனியாவின் வரலாறு தொடர்பாக, ஹிந்தியில் எழுதப்பட்டு உள்ள நூலை, வெங்கையா நாயுடுக்கு, லிதுவேனிய அதிபர் வழங்கினார்.
-- நமது நிருபர் -

மூலக்கதை