மாநிலங்களில் மழை பாதிப்பு : தப்பியது கேரளா

தினமலர்  தினமலர்
மாநிலங்களில் மழை பாதிப்பு : தப்பியது கேரளா

புதுடில்லி : கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேரளாவில், மழை நின்றதால், இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே நேரத்தில், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தொடர்வதால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், கேரளாவில், இதுவரை, 113 பேர் உயிரிழந்து உள்ளனர். மழை நின்றுள்ளதால், வெள்ளம் வடியத் துவங்கி, இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை, 9:00 மணி நிலவரப்படி, மலப்புரத்தில், 50 பேரும், வயநாட்டில், 12 பேரும் உயிரிழந்து உள்ளனர். மேலும், 28 பேரை காணவில்லை.


மலப்புரத்தின் கவலப்பாரா மற்றும் வயநாட்டின் புத்தமலா கிராமங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. அங்கு, மீட்புப் படையினர் தொடர்ந்து, பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில், மழை நின்று, வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. அதையடுத்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானின்


பெரும்பாலான பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, மவுன்ட் அபுவில் அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அஜ்மீரில், 10 செ.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயத்தில் இருந்த கோட்டாவில், மழை சற்று குறைந்து, நிலைமை கட்டுக்குள் உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு, பலத்த மழை பெய்யக் கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆந்திரா


ஆந்திராவில் மழை வெள்ளத்தால், கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்கள் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில், 87 கிராமங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விஜயவாடாவின் பிரகாசம் அணையில் இருந்து, விநாடிக்கு, 8.21 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பின், அது, 7.99 லட்சம் கன அடியாக குறைந்தது. அதே நேரத்தில், அணைக்கு, 7.57 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மழை மற்றும் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருப்பதால், 87 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர, நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து, 6.8 லட்சம் கன அடி, டாக்டர், கே.எல். ராவ் சாகர் அணையில் இருந்து, 6.5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. கோதாவரி நதியில், தவலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள, சர் ஆர்தர் காட்டன் அணையில் இருந்து, 7.46 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதனால், எல்லையோர கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், இந்த இரண்டு மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் மூழ்க்கியுள்ளன.


ஹிமாச்சல பிரதேசம்


ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழையை தொடர்ந்து, காங்க்ரா மாவட்டத்தில் உள்ள, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாலம்புராவில், பல ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய, ஆறு பேரை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், கன மழையும், காங்க்ரா உள்ளிட்ட சில மாவட்டங்களில், பலத்த கன மழையும் பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசம்


மத்திய பிரதேசத்தில், சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில், 70 பேர் பலியாகி உள்ளனர். இதில், 15 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின், மேற்கு பகுதிகளில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


காந்த்வா மாவட்டத்தில் உள்ள, இந்திரா சாகர் அணை உட்பட, முக்கிய அணைகள் நிரம்பி வழிவதால், அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன.

மூலக்கதை