ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு!

தினமலர்  தினமலர்
ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு!

சென்னை:தமிழகத்தில், ஆவின் பால் விற்பனை விலை,லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும், பால் கொள்முதல் விலையையும், அரசு அதிகரித்துள்ளது. புதிய விலை உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.



'பசுந்தீவனம், கலப்பு தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர பொருட்கள் விலை, நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை, உயர்த்த வேண்டும்' என, பால் உற்பத்தியாளர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.



அதை ஏற்று, பால் கொள்முதல் விலை மற்றும் பால் விலையை உயர்த்த, அரசு முடிவு செய்தது. 'விரைவில் பால் விலை உயர்த்தப்படும்' என, சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்திருந்தார்.இடையில், வேலுார் லோக்சபா தேர்தல் வந்ததால், பால் விலை உயர்வு அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.தேர்தல் முடிந்த நிலையில், எப்போது வேண்டு மானாலும், விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு



ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:கிராம அளவில் உள்ள, தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், உறுப்பினர்களாக உள்ள, 4.60 லட்சத்திற்கும் மேலான, பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறும் வகையில், பசும்பால் கொள்முதல் விலை, லிட்டர், 28 ரூபாயிலிருந்து, 32 ரூபாயாக, அதாவது, 4 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.எருமை பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, 35 ரூபாயிலிருந்து, 41 ரூபாயாக, அதாவது, 6 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான, பால் பணப் பட்டுவாடா, எந்த விதத்திலும் பாதிப்படையக் கூடாது. பால் பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலக செலவு, கணிசமாக உயர்ந்துள்ளது.இவற்றை கருத்தில் கொண்டும், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால், தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தவும், அனைத்து வகையான, ஆவின் பால் விற்பனை விலை, லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்படும். பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு, நாளை முதல்அமலுக்கு வரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விலை உயர்வு குறித்து, பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும், இந்த முடிவை தான் எடுத்திருப்பர். கொள்முதல் விலையை உயர்த்தும் போது, விற்பனை விலையை உயர்த்தி தான் ஆக வேண்டும்.ஐந்து ஆண்டுகளாக, பால் விலையை உயர்த்தவில்லை; கொள்முதல் விலையையும் உயர்த்தவில்லை.

நஷ்டம் வருமா?



தற்போதும், மன மகிழ்ச்சியோடு, இந்த முடிவை எடுக்கவில்லை. ஆவின் நிறுவனம், லாபத்தில் இயங்கி வருகிறது; நஷ்டத்தில் போய் விடக் கூடாது என்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர்களிடம் விற்க முடியாத பாலை, 'பவுடர்' ஆக்குகிறோம்; அதில் நஷ்டம் தான் ஏற்படும். அதை சரிக்கட்ட பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், ஆவின் நிறுவனம், குறைந்த அளவே பால் விலையை உயர்த்தி உள்ளது. இதை, மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தனியார் பால் விலையும் உயரும்!



ஆவின் பால், தற்போது, 'நீலம், பச்சை, ஆரஞ்சு' என, மூன்று வண்ண பாக்கெட்டுகளில், விற்பனை செய்யப்படுகிறது. நீல நிற பாக்கெட் பால், 1 லிட்டர், 40 ரூபாய்; பச்சை நிறம், லிட்டர், 44 ரூபாய்; ஆரஞ்சு நிற பாக்கெட் பால், லிட்டர், 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, மூன்று வகை பாலும், லிட்டருக்கு, ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தனியார் பால், லிட்டர், 50 - 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால், தனியார் நிறுவனங்களும், பால் விலையை, விரைவில் உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை