திணறல்: கட்சி கரைவதால் சந்திரபாபு கவலை: மேலும் பலர் பா.ஜ.,வுக்கு தாவ முயற்சி

தினமலர்  தினமலர்
திணறல்: கட்சி கரைவதால் சந்திரபாபு கவலை: மேலும் பலர் பா.ஜ.,வுக்கு தாவ முயற்சி

அமராவதி: தெலுங்குதேசம் கட்சியின், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும், பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடிப்பதால், கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான, சந்திரபாபு நாயுடு கவலை அடைந்துள்ளார்.

நாயுடுவின் சோகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், அவருக்கு எதிராக பேசி, பல பிரமுகர்கள் சிக்கலை உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில், அவர்கூட்டிய, உயர் மட்டக் கூட்டத்தில், இரண்டாம் மட்ட தலைவர்கள், பலர் கலந்து கொள்ளாமல், அவருக்கு அதிர்ச்சி வைத்தியமும் அளித்தனர்.ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு, 69, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ளார். அந்தக் கட்சியை துவக்கிய, பிரபல தெலுங்கு நடிகர், ராமராவை வீழ்த்தி, கட்சியை கைப்பற்றிய அவர், மாமனார் என்று கூட பார்க்காமல், ராமராவ் உயிருடன் இருந்த போது, அவரை பலவாறாக துாற்றினார்.

ஆந்திர மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தியாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கிய சந்திரபாபு நாயுடுவுக்கு, இப்போது சிரம திசை நடக்கிறது. சமீபத்திய தேர்தல்களில், அவருடைய கட்சி படுதோல்வி அடைந்ததுடன், கட்சியின் பிரபலங்களை கட்டுக்குள் வைக்க முடியாமல் அவர் தடுமாறுகிறார்.

மாநில முதல்வர், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசை சேர்ந்த, ஜெகன் மோகன் ரெட்டி, 46, வெற்றிக்கொடி நாட்டி வருவதால், சந்திரபாபு தள்ளாடி வருகிறார்.கடந்த ஏப்ரலில், லோக்சபா தேர்தலுடன் இணைந்து, சட்டசபை தேர்தலையும் சந்தித்த ஆந்திராவில், மொத்தமுள்ள, 175 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு,23 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மேலும், லோக்சபா தேர்தலில், அவரின் கட்சி, மூன்று தொகுதிகளில் தான், போணியானது.இந்த சோகத்தில் இருந்து மீள முடியாத நிலையில், அவர் இருந்த போது, அமராவதி நகரில் இருந்த சந்திரபாபுவின் கட்சி அலுவலகத்தை, இடித்து தரை மட்டமாக்கிய, முதல்வர் ஜெகன், அதன் அருகில் உள்ள, சந்திரபாபுவின் பங்களாவையும் இடிக்க, நாள் பார்த்து வருகிறார்.

'எஸ்கேப்'



இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை இழுத்து மூட, முக்கிய பிரமுகர்கள் முடிவு செய்து விட்டனர் போலும். தேர்தலுக்கு முன்னரே ஏராளமான பிரபலங்கள், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் தாவிய நிலையில், தேர்தலுக்குப் பிறகும், ஏராளமானோர் தாவி வருகின்றனர்.அவரின், தெலுங்கு தேசம் கட்சிக்கு இருந்த, ஆறு, ராஜ்யசபா எம்பி.,க் களில், நான்கு பேர், பா.ஜ.,வுக்கு தாவி விட்டனர். அவர்களில், நீண்ட காலமாக, சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கிய, சுஜானா சவுத்ரி, சி.எம்.ரமேஷ் முக்கியமானவர்கள்.

இவர்களுடன், பிற்படுத்த பட்ட பிரிவை சேர்ந்த, 'கபு' ஜாதியின் முக்கிய பிரமுகர்கள், நாயுடுவை, நட்டாற்றில் விட முடிவு செய்துள்ளனர்; அவர்கள், பா.ஜ.,வுக்கு தாவ, முடிவு செய்துள்ளனர். தென் மாநிலங்களை குறிவைத்து, காய் நகர்த்தி வரும், பா.ஜ., ஆந்திராவில், இழுக்கும், 'ஆட்டம்' ஆடி வருகிறது. தெலுங்கு தேசம் பிரமுகர்கள் பலரையும், குறிவைத்து, இழுத்து வருகிறது.

சமீபத்தில், கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை, சந்திரபாபு கூட்டியிருந்தார். கட்சியை வளர்க்க, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அதில் விவாதிக்க முடிவு செய்திருந்தார். அதை அறிந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள், 'எஸ்கேப்' ஆகி விட்டனர்.

வருத்தம்



குறிப்பாக, விஜயவாடா எம்.பி., கேசிநெனி நனி, முன்னாள் மத்திய அமைச்சர், அசோக் கஜபதி ராஜு, மூத்த எம்.எல்.ஏ., கேசவ், முன்னாள் மாநில அமைச்சர்கள், கன்டா ஸ்ரீனிவாச ராவ், ஒய். ராமகிருஷ்னுடு, முன்னாள் எம்.பி., ஜே.சி.திவாகர் ரெட்டி போன்றோர், கூட்டத்தை புறக்கணித்தனர்.

இவர்கள், பா.ஜ.,வுக்கு தாவக் கூடும் என, வெளியாகும் தகவலால், நாயுடு கவலை அடைந்து உள்ளார்.சில மாதங்களுக்கு முன் வரை, தன் கட்டளைக்கு கட்டுப்பட்டு இருந்த கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது தன்னை அறவே மதிப்பதில்லை என்பதில், சந்திரபாபுவுக்கு கடும் வருத்தம். அதை உறுதி செய்வது போல, சட்டசபை கட்சி துணைத் தலைவர், ஜி.புச்சையா சவுதரி, 'கட்சியிலிருந்து விலகப் போகிறேன்' என அறிவித்து, சந்திரபாபுவின் செயல்பாடுகளை வெளிப்படையாக கண்டித்துள்ளார்.

'தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தான், சந்திரபாபு உதவி செய்கிறார்; பிறரை கண்டு கொள்வதில்லை. 'ஆனால், முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி அப்படியில்லை. அனைவரையும் அனுசரித்து போகிறார்' என பேசி, கலங்க அடித்துள்ளார்.இப்படியே நிறைய பிரபலங்கள், கட்சி யையும், தன்னையும் விமர்சிப்பதை பார்த்து, செய்வதறியாது திகைத்து நிற்கிறார், சந்திரபாபு நாயுடு.

மூலக்கதை