சிறப்பு அந்தஸ்து ரத்து சரிதான் ஜனாதிபதி ராம்நாத் உரை

தினகரன்  தினகரன்
சிறப்பு அந்தஸ்து ரத்து சரிதான் ஜனாதிபதி ராம்நாத் உரை

புதுடெல்லி: ‘‘ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால், அ்ப்பகுதி மக்கள், நாட்டின் இதர பகுதி மக்கள் பெறும் உரிமைகளையும், சலுகைகளையும் பெறுவார்கள்,’’ என சுதந்திர தின உரையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  தெரிவித்தார். நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு 73வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறேன். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளை நம் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தியின் 150வது பிறந்த தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம். தற்போதைய இந்தியா, காந்தி வாழ்ந்த இந்தியாவை விட முற்றிலும் வேறுபட்டது. ஆனாலும், ஏழை மக்களுக்கான நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் நாம் காந்தியின் தத்துவங்களை செயல்படுத்துகிறோம். ஜம்மு காஷ்மீரில்  சமீபத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அதன் மக்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் பெறும் அதே உரிமைகள், வசதிகளை பெறுவார்கள். முத்தலாக் முறையை நீக்கியதன் மூலம் நமது மகள்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பாரதியார் பாடல்ஜனாதிபதி தனது உரையில் மேலும் கூறுகையில், ‘‘தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதி 100 ஆண்டுகளுக்கு முன்பே, சுதந்திர இயக்கத்துக்கு குரல் கொடுத்தார். ‘‘மந்திரம் கற்போம், வினை தந்திரம் கற்போம், வானையளப்போம், கடல்  மீனையளப்போம், சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம், சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்,’ என்று அவர் பாடினார். இது போன்ற லட்சியங்கள், நம்மை கற்க வைத்து சிறந்தவர் ஆக்கலாம். இந்த ஆர்வமும், சகோதரத்துவமும்,  நம்முடன் எப்போதும் இருந்து இந்தியாவை ஆசிர்வதிக்கும்,’’ என்றார்.

மூலக்கதை