ஒடிசா காப்பகத்தில் எச்ஐவி பாதித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணை துவக்கம்

தினகரன்  தினகரன்
ஒடிசா காப்பகத்தில் எச்ஐவி பாதித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணை துவக்கம்

பவானிபத்னா: ஒடிசாவில் உள்ள காப்பகத்தில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, அதன் கண்காணிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. ஒடிசாவின் கலகந்தி மாவட்டத்தின் பாலங்கிர் பகுதியில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் உள்ளது. இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஒருவர் குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் பரிந்துரையின்பேரில் கடந்த 2016ம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சிறுமியை அவரது தாய் கடந்த மார்ச் மாதம் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதுபற்றி விசாரித்தபோது காப்பகத்தின் கண்காணிப்பாளர் சரோஜ் தாஸ் என்பவர் தனது மகளுக்கும், எச்.ஐ.வி.யால் பாதித்த மற்ற சிறுமிகளுக்கும் பாலியில் தொல்லை கொடுத்தார் எனவும், அதனால் மகளை வீட்டுக்கு அழைத்து  வந்துவிட்டதாக கூறினார். தற்போது இந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார், குழந்தைகள் நலக் குழுவினர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன. சரோஜ் தாசிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்த சரோஜ் தாஸ், ‘‘இது எனது பெயரை கெடுக்க நடந்த சதி. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை தேவை’’  என கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காப்பகத்திலும் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்குள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். காப்பகத்தில் தங்கியிருந்தவர்களிடமும் சரோஜ் தாஸ் குறித்து விசாரிக்கப்பட்டது.

மூலக்கதை