ஆந்திராவில் பிரசவத்திற்காக 8 கி.மீ. தூரம் கொட்டும் மழையில் கர்ப்பிணியை டோலியில் தூக்கி வந்த உறவினர்கள்: சாலை வசதி இல்லாததால் தொடரும் அவலம்

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் பிரசவத்திற்காக 8 கி.மீ. தூரம் கொட்டும் மழையில் கர்ப்பிணியை டோலியில் தூக்கி வந்த உறவினர்கள்: சாலை வசதி இல்லாததால் தொடரும் அவலம்

திருமலை: ஆந்திராவில் சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக கர்ப்பிணியை கொட்டும் மழையில் 8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அடிப்படை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி  யின்றி தவித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் நோயால் தாக்கப்பட்டால் தங்களுக்குத் தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். கடுமையான நோயால் உடல்நிலை மிகவும் மோசமாகும்போது டோலி கட்டி சுமார் 20  கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் வட்டாலிமடுகுல மண்டலம், சங்காரம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஜானப்பரெட்டி தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து உடனடியாக டோலி கட்டி 15 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அப்போது கனமழை கொட்டியது. கொட்டும் மழையில் நனைந்தபடியே முட்புதர்கள் நிறைந்த சேறும் சகதியுமான மண்பாதையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து 8 கி.மீ. கடந்த நிலையில் அங்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. இதில் கர்ப்பிணியை சிகிச்சைக்காக கொத்தவலசாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜானப்பரெட்டி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அரசு கூறி வருகிறது. ஆனால் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சுத்தமான குடிநீர், மருத்துவம், மின்சாரம்,  கல்வி ஆகியவை கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எத்தனை அரசுகள் மாறினாலும் தங்களது நிலை மட்டும் மாறவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் நதியை கடந்து கர்ப்பிணி ஒருவரை பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்து   சென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை