கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் 3 நாளில் 8 பேர் பரிதாப பலி...ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் 3 நாளில் 8 பேர் பரிதாப பலி...ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 3 நாளாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கண்ணூர், காசர்கோடு, இடுக்கி, வயநாடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், நாளை திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இன்று பத்தணம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும், நாளை பத்தணம்திட்டா, கோட்டையம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் மலப்புரம் மாவட்டத்திலும், 25ம் தேதி வியாழன் கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு கொல்லம் அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து 3 குமரி மீனவர்கள் மாயமாயினர்.

இதில் சகாயராஜின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. மற்ற 2 பேரை மீட்கும் பணியில் கடலோர காவல்துறையினர் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டையம் கிடங்கூரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மனேஷ் என்பவரின் உடல் மீட்கப்பட்டது.

 கொச்சி வைப்பின் பகுதியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி தங்கவேலு(32) என்பவர் இறந்தார். திருச்சூர் புத்தன்சிறையில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற பிரகாஷ் என்பவர் மகனான கல்லூரி மாணவன் விஷ்ணு(19) தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

கனமழையை தொடர்ந்து கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டையம் மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை