கர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில் மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை...2 சுயேட்சைகளின் மனுவை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் நிலையில் மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை...2 சுயேட்சைகளின் மனுவை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்

பெங்களூரு: கர்நாடகாவில் மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என்று 2 சுயேட்சை எம்எல்ஏக்களின் கோரிக்கைையை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ள 15 எம்எல்ஏக்கள், கடந்த சில நாட்களுக்கு முன், தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பான்மை பலம் இழந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பதவி விலககோரி பாஜவினர் போராட்டம் நடத்தினர்.

கடந்த 12ம் தேதி சட்டபேரவை கூட்டம் தொடங்கியதும் முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் சட்டசபை கூடியது, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து, ‘காங்கிரஸ் எம்எல்ஏகள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இறுதி தீர்ப்பு வரும்படி நம்பி–்க்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டும்’ என்றார்.

இரண்டாவது நாளான 19ம் தேதி மீண்டும் பேரவை கூடியபோதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடந்தது. அதே நாளில் வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமி, ஆளுநர் வி. ஆர். வாலா எழுதிய இரு கடிதத்தையும் கண்டுக்கொள்ளவில்லை.

அன்றிரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சபாநாயகர் அவையை திங்கட்கிழமை (இன்று) ஒத்தி வைத்தார். பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேரவை கூடியது.

காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏகளுக்கு இரு கட்சிகள் சார்பில் கொடுத்துள்ள கொறடா உத்தரவு பின்பற்றாதவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்த பின் தான் நம்பிக்கைகோரும் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்து கொள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி பேசினர்.

முன்னதாக, கொறடா உத்தரவு மதிக்காத 12  காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை  சட்டத்தின் கீழ் பதவி நீக்கம்  செய்யக்கோரி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்  சித்தராமையா மற்றும் மாநில  காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் ஆகியோர்  சபாநாயகர்  கே. ஆர். ரமேஷ்குமாரிடம் கொடுத்திருந்தனர்.

அதையடுத்து சபாநாயகர்,  சம்மந்தப்பட்ட 12 எம்எல்ஏகளுக்கு சட்டபேரவை செயலாளர் மூலம்  நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். அதில், ‘உங்கள் மீது ஏன் கட்சி தாவல் தடை  சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்ககூடாது.

இது தொடர்பாக 23. 07. 2019 (நாளை)  காலை 11 மணிக்கு  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில்  சட்டபேரவை  விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.



அதிருப்தி எம்எல்ஏகள் அவைக்கு வராமல் புறகணித்தால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 15 பேரின் உறுப்பினர் பதவியை பறிக்கும் அதிரடி முடிவை சபாநாயகர் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘கர்நாடக சட்டசபையில், அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இதுெதாடர்பாக அரசுக்கும், சபாநாயகருக்கும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டது.   மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தி, ‘நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறார். இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்ெகடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்றார்.

அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘அதற்கு சாத்தியமில்லை என்றார்.

தொடர்ந்து முகுல் ரோஹ்தி பேசுகையில், ‘சரி நாளை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்றார்.

அதன்பின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘நாளை வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும்’ என்று கூறினார். அதையடுத்து, உச்சநீதிமன்றம் இன்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதனால், கர்நாடக சட்டசபையில் சபாநாயகரின் அறிவிப்பின்படி, இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுவது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது.

நாளைக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகருக்கு பதில் அளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது. அதன்பின், அவையில் பெரும்பான்மை இல்லை என்பது உறுதியாகும் பட்சத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன் முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

பொதுவாக சட்டபேரவை கூட்டம் நடக்கும்போது, விதானசவுதாவை சுற்றி ஒரு கி. மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.

ஆனால் இன்று காலை 8 மணி முதல் விதானசவுதா மட்டுமில்லாமல் ஆளுநர் மாளிகை வளாகம் சுற்றி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். ஏசிபி, டிசிபிகள், இன்ஸ்பெக்டர்களும் அதிகளவில் உள்ளனர்.

கண்ணீர் புகை வீசும் வாகனம், தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனங்கள், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிற்க வைத்துள்ளது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

.

மூலக்கதை