யோகி ஆதித்யநாத் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார் : 2-வது நாள் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
யோகி ஆதித்யநாத் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார் : 2வது நாள் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா குற்றச்சாட்டு

மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் கொல்லப்பட்ட 10 பேரின் உறவினர்களை சந்திக்க பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ளது சபாஹி கிராமம். இங்கு ஆதிவாசி விவசாயிகள்  அதிகம் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை காலி செய்யும்படி சபாஹி  கிராமத் தலைவர் யக்யா தத் கூறியதை விவசாயிகள் ஏற்க மறுத்து வந்தனர். இது  தொடர்பாக, இரு தரப்பினர் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்துள்ளது.  இந்நிலையில்,  ஆதிவாசி விவசாயிகள் மீது யக்யா தத் ஆதரவாளர்கள் கடந்த 17ம் தேதி  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 பெண்கள் உட்பட 10 பேர்  கொல்லப்பட்டனர். 19 பேர் காயம் அடைந்தனர்.  இவர்கள் வாரணாசி, சோன்பத்ரா  மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சந்தத்து பேசினார்.  பின்னர், துப்பாக்கிச்சூடு நடந்த சபாஹி கிராமத்துக்கு புறப்பட்டார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் சென்றனர். பிரியங்காவை  மிர்சாபூரில் உ.பி ேபாலீசார் வழிமறித்து, சோன்பத்ரா செல்ல வேண்டாம் என  கூறினர். இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘‘துப்பாக்கிச்சூட்டில்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அமைதியான முறையில் சந்திக்க  விரும்புகிறேன். என்னை நீங்கள் தடுப்பதற்கான உத்தரவை காட்டுங்கள். நான்கு  பேருடன் மட்டும் சோன்பத்ரா செல்ல தயாராக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை  நான் சந்திக்க விரும்புகிறேன்,’’ என்றார். போலீசார் அதற்கு பதில்  அளிக்காததால், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். இதையடுத்து,  அவரையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர், பிரியங்காவை  போலீசார் விடுவித்தனர். பின்னர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கலவரத்தில் கொல்லப்பட்ட 10 பேரின் உறவினர்களை சந்திக்க பிரியங்கா காந்திக்கு இன்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இருவர் மட்டும் மிர்சாபூரில் பிரியங்கா காந்தியை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.

மூலக்கதை