கர்நாடக அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைந்தது

ஒகேனக்கல்: கர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக உள்ள நிலையில், தண்ணீர் வரத்து படிப்படியாக உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கே. ஆர். எஸ் அணையில் இருந்து கடந்த 16ம் தேதி வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நீர் நேற்று பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தண்ணீர் வந்து சேரவில்லை. இதற்கிடையே, கே. ஆர். எஸ் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அது படிப்படியாக உயர்ந்து தற்போது அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.



இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கர்நாடக அணையில் இருந்து நேற்று காலை முதல் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக கே. ஆர். எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அது படிப்படியாக உயரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் 8 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப் பட்டது.

நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் இன்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு தண்ணீர் வந்தடைந்துள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீர்வரத்து படிப் படியாக உயர வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் குறைந்தளவே தண்ணீர் கொட்டிய நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.

இந்த தண்ணீர் இன்றிரவு மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை