இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து பிரியங்காகாந்தி விடியவிடிய தர்ணா: அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து பிரியங்காகாந்தி விடியவிடிய தர்ணா: அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி

லக்னோ: சோன்பத்ரா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமது கட்சியினருடன் விடுதியில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் நிலத்தகராறு காரணமாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 3 பெண்கள் உள்பட பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்தனர்.

19 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் ெதாடர்பாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 29 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போலீசாரால் நாராயண்புர் பகுதியில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைக் கண்டித்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் அங்குள்ள சூனார் விடுதியில் பிரியங்கா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலவரம் நடைபெற்ற பகுதியில்144 தடையுத்தரவு அமலில் இருந்த நிலையில் அதை மீறும் வகையில் பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

பிரியங்கா காந்தி தங்கியிருந்த விடுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதும், அவர் இருட்டில் மெழுகுவர்த்திகளை  ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சியினருடன் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். ஒருகட்டத்தில், மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரியங்கா காந்தியிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.



அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதிகாலை 1. 30 மணியளவில் விடுதியில் இருந்து கிளம்பினர். இதற்கிடையே, போலீசார் தரப்பில் பிரியங்கா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், ‘மாநில அரசு என்னை சிறைக்கு அனுப்பினாலும் தயார்; நான் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன்.

எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் வந்துள்ளேன்’’ என்றார்.

.

மூலக்கதை