10 பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது: உத்தரப்பிரதேச போலீசார் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
10 பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது: உத்தரப்பிரதேச போலீசார் நடவடிக்கை

லக்னோ: உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில்  பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தியை உ.பி போலீசார் நேற்று கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,  சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ளது சபாஹி கிராமம். இங்கு ஆதிவாசி விவசாயிகள்  அதிகம் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை காலி செய்யும்படி சபாஹி  கிராமத் தலைவர் யக்யா தத் கூறியதை விவசாயிகள் ஏற்க மறுத்து வந்தனர். இது  தொடர்பாக, இரு தரப்பினர் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்துள்ளது.  இந்நிலையில்,  ஆதிவாசி விவசாயிகள் மீது யக்யா தத் ஆதரவாளர்கள் கடந்த 17ம் தேதி  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 பெண்கள் உட்பட 10 பேர்  கொல்லப்பட்டனர்.  19 பேர் காயம் அடைந்தனர்.  இவர்கள் வாரணாசி, சோன்பத்ரா  மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சந்தத்து பேசினார்.  பின்னர், துப்பாக்கிச்சூடு நடந்த சபாஹி கிராமத்துக்கு புறப்பட்டார்.  அவருடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் சென்றனர். பிரியங்காவை  மிர்சாபூரில் உ.பி ேபாலீசார் வழிமறித்து, சோன்பத்ரா செல்ல வேண்டாம் என  கூறினர். இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘‘துப்பாக்கிச்சூட்டில்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அமைதியான முறையில் சந்திக்க  விரும்புகிறேன். என்னை நீங்கள் தடுப்பதற்கான உத்தரவை காட்டுங்கள். நான்கு  பேருடன் மட்டும் சோன்பத்ரா செல்ல தயாராக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை  நான் சந்திக்க விரும்புகிறேன்,’’ என்றார். போலீசார் அதற்கு பதில்  அளிக்காததால், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். இதையடுத்து,  அவரையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர், பிரியங்காவை  போலீசார் விடுவித்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து  விசாரணை நடத்துவதற்காக, ‘தேசிய   பழங்குடியினர் ஆணையம்’ குழு வரும்  திங்கட்கிழமை சோன்பத்ரா செல்கிறது.ராகுல் கண்டனம்பிரியங்கா கைதுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் டிவிட்டரில்  விடுத்துள்ள பதிவில், ‘சோன்பத்ராவில் பிரியங்கா சட்ட விரோதமாக கைது  செய்யப்பட்டுள்ளார். தங்கள் சொந்த நிலத்தை காலி செய்ய மறுத்த ஆதிவாசி விவசாயிகள் 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின்  குடும்பத்தினரை பிரியங்கா சந்திப்பதை தடுப்பதற்காக அதிகாரம் இஷ்டத்துக்கு  பயன்படுத்தப்படுகிறது. இது, உ.பி.யில் பா.ஜ. அரசினால் மக்களுக்கு  பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை அதிகமாகி இருப்பதை காட்டுகிறது,’ என  கூறியுள்ளார்.29 குற்றவாளிகள் கைது உ.பி  சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள்  அவையின் மையப் பகுதிக்கு வந்து, ‘உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என  கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டு 40 நிமிடங்கள்  ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், சோன்பத்ரா துப்பாக்கிச்சூடு  சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். அவர் கூறுகையில்,  ‘‘சபாஹி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே நிலத் தகராறு காரணமாக ஏற்கனவே  முன்விரோதம் இருந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்த அமைதி  நடவடிக்கைகளையும் போலீசாரும், உள்ளூர் அதிகாரிகளும் எடுக்கவில்லை. இது  தொடர்பாக விசாரணை குழு அளித்த அறிக்கைப்படி, கோராவல் பகுதியின் துணை கலெக்டர், வட்டார அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர். ரோந்து எஸ்.ஐ மற்றும் காவலர் என 5  பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிராம தலைவர் யக்யா தத் உட்பட 29 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மூலக்கதை