முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் விவகாரம் 2 வாரம் அவகாசம் கேட்டு கேரளா மனு

தினகரன்  தினகரன்
முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் விவகாரம் 2 வாரம் அவகாசம் கேட்டு கேரளா மனு

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும்,’ என கேரள அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கடந்த மே.14ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அணை பகுதியில் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், கேரள அரசு தொடர்ந்து மேற்கண்ட பகுதியில் நிரந்தர கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும் என்பதால் அவமதிப்பு வழக்கை பதிவு செய்து கேரளா அரசு மீது தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அதன் இறுதி உத்தரவு வரும் வரை எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. வாகனம் நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பான பதில் மனுவை அடுத்த 15 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என கேரள அரசுக்கு கடந்த 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், கேரள அரசு நேற்று புதிய பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு பதில் மனுவை தாக்கல் செய்ய கூடுதலாக 2 வாரம் அவகாசம் வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை