கேரளாவில் கனமழை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினகரன்  தினகரன்
கேரளாவில் கனமழை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. பெரும்பாலான கடைகள் தண்ணீரில் மூழ்கின. கேரளாவில்  வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர்  வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை  பெய்யும். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்  வரலாறு காணாத பலத்த மழை பெய்தது.  ஆனால்,  இவ்வருடம் ஜூன் 2வது வாரத்தில்  தான் பருவமழை தொடங்கியது. கடந்த ஒன்றரை  மாதத்தில் வழக்கமாக பெய்ததை விட 40  சதவீதம் குறைவாகவே மழை அளவு இருந்தது. இந்நிலையில், கடந்த சில  தினங்களாக பாலக்காடு, கண்ணூர் உள்பட சில மாவட்டங்களில் பருவமழை   தீவிரமடைந்துள்ளது.  வடமேற்கு திசையில் இருந்து கேரளா, லட்சத்தீவை நோக்கி மணிக்கு 50  கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு,  வயநாடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கன மழை விடிய விடிய பெய்தது. நேற்றும் நீடித்தது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பம்பை ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  தற்போது ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் வந்து செல்லும் பக்தர்கள் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை