குறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குறைவான எரிபொருளுடன் பறந்த மும்பை விமானம், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 153 பயணிகள்: பைலட் கத்தியதால் லக்னோவில் தரையிறக்கம்

லக்னோ: ஒரு மணி நேரத்திற்கு கூடுதல் எரிபொருளை வைத்திருக்க வேண்டிய நிலையில், கூடுதலாக 10 நிமிடத்திற்கு மட்டுமே எரிபொருளை வைத்துக் கொண்டு பறந்த தனியார் விமானம் விபத்தில் இருந்து தப்பியது. பைலட் கத்தியதால், விமானம் லக்னோவில் தரையிறக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக 153 பயணிகள் உயிர் பிழைத்தனர். மும்பையில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் மாலை 3. 30 மணியளவில் விஸ்தாரா யுகே944 என்ற தனியார் விமானம் 153 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் லக்னோவில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வான்வெளியில் விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ‘ஏர் டிராபிக் கன்ட்ரோல்’ (ஏடிசி) அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அளிக்கும் சிக்னல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விமானத்தின் பைலட்டுக்கு தகவல் வழங்கப்படும்.

இந்த நிலையில் விஸ்தாரா விமான பைலட் ஏடிசியிடம், ‘எரிபொருள் குறைவாக உள்ளது’ என்று பரபரப்புடன் கத்தத் தொடங்கியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட ஏடிசி அதிகாரிகள், விஸ்தாரா விமானத்துக்கான டிராபிக்கை ஒழுங்குபடுத்தி, லக்னோவில் விமானம் தரையிறக்கினர்.

அதன் பின்னர் விமானத்தை சோதனை செய்ததில் அதில் 300 கிலோ பெட்ரோல் மட்டுமே இருந்தது. இதனை வைத்துக் கொண்டு வான்வெளியில் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வட்டமடிக்க முடியும்.

மோசமான வானிலை காரணமாக, பக்கத்து விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று ஏடிசி அதிகாரிகளால் இந்த விமானம் அறிவுறுத்தப்பட்டிருந்தால் 153 பயணிகளின் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும். முதலில் அலகாபாத் விமான நிலையத்தில் தரையிறக்குவதா, லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்குவதா என்ற குழப்பம் நீடித்து, ஒருவழியாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.

பொதுவாக மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானங்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும்.

ஆனால், அவ்வாறு எடுத்து செல்லப்படாததால், இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விஸ்தாரா நிறுவனம் அளித்த பதிலில் போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பைலட்டிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் மாலை 3. 30 மணிக்கு மும்பையில் புறப்பட்ட விமானம் மாலை 5 மணிக்கு டெல்லி சென்றிருக்க வேண்டும். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையால் 5. 45 மணிக்கு லக்னோவில் விமானம் தரை இறக்கப்பட்டு, எரிபொருளை நிரப்பிக் கொண்டு டெல்லிக்கு நள்ளிரவு 1 மணிக்கு போய் சேர்ந்தது.

கிட்டதிட்ட 10 மணி நேரம் தாமதமாக டெல்லி சென்றது. ஆனால், பயணிகள் அதிகாலை 4. 15 மணிக்குதான் டெல்லி விமானம் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம் என்கின்றனர்.

இத்தனை குழப்பத்துக்கும் இடையே, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சிவில் விமான இயக்குனரகம் சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி வருகிறது.

.

மூலக்கதை