ஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரின் சோபோர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ளனர். வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா நகரில் சோபோர் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள குண்ட் பிராத் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநில காவல்துறை மற்றும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். பயங்கரவாதியின் சடலத்தை அப்பகுதியில் இருந்து கைப்பற்றியுள்ள போலீசார், அவனிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி உள்ளூரை சேர்ந்தவன் என முதலகட்ட தகவல் தெரியவந்துள்ளதாகவும், அவன் எந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்பது இன்னும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக நம்பப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், சோபூர் பகுதியில் இணைய சேவையை முடக்கியுள்ள அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடைபெறும் இடத்திற்கு செல்லும் சாலையையும் மூடியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூரில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரியும் மூடப்பட்டுள்ளது.

மூலக்கதை