ஆந்திராவில் சிவன் கோயிலில் பயங்கரம்: தலையைவெட்டி 3 பேர் நரபலி லிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவில் சிவன் கோயிலில் பயங்கரம்: தலையைவெட்டி 3 பேர் நரபலி லிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்

திருமலை: இரண்டு பெண்கள் உள்பட 3 பேரின் தலையை வெட்டி நரபலி கொடுத்தும், ரத்தத்தால் லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதும் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தனக்கல்லு மண்டலம், கொத்தி கோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது.

இங்கு பூசாரியாக ஓய்வுபெற்ற ஆசிரியரான சிவராம்ரெட்டியின் சகோதரி கமலம்மா உள்ளார். கோயில் பூஜைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளை கமலம்மாள்தான் கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் முன் சிவராம் ரெட்டி, கமலம்மா மற்றும் கொத்தி கோட்டா கிராமத்தை சேர்ந்த பெங்களூரில் வசித்து வரும் லட்சுமியம்மா ஆகிய 3 பேரும் கோயிலில் தலையை வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்தனர்.

மேலும் கோயில் முழுவதும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததோடு, சிவலிங்கத்திற்கும் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

கடந்த 6 மாதங்களாக இந்த சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக ஒரு தகவல் பரவி இருந்தது. பெங்களூரில் வசித்து வரும் லட்சுமியம்மா மூலம் சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக வந்த தகவலை தெரிந்தகொண்ட பெங்களூரை சேர்ந்த சிலர் இங்கு வந்திருக்கலாம்.

அப்போது சிவராம்ரெட்டி, கமலம்மா, லட்சுமியம்மா 3 பேரையும் கொலை செய்து இருக்கலாம் அல்லது நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை