கோலாட்டமெல்லாம் நல்லாதான் இருக்கு... ஓட்டு விழுமா...?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோலாட்டமெல்லாம் நல்லாதான் இருக்கு... ஓட்டு விழுமா...?

தெலங்கானா, மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில தேர்தல் அடுத்தடுத்த சில வாரங்களில் நடக்கவுள்ளதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மத்திய பிரதேசத்தின் 230 தொகுதி, மிசோரமின் 40 தொகுதிகளுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், வரும் 28ம் தேதி தேர்தல் நடக்கிறது.

ராஜஸ்தானின் 200 தொகுதிகள், தெலங்கானாவின் 199 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் துவங்கிய நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வருகிற 22ம் தேதி வேட்புமனுக்குள் திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் 18 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள 72 தொகுதிகளில் இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 4 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த பின், டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.



‘மிட் நைட்’ ஆலோசனை அமித் ஷா தேர்தல் வியூகம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள பாஜ தலைமை அலுவலகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழு சந்திப்பு நடந்தது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜ கட்சி வெற்றி பெற்று  ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில், கட்சியின் மூத்த அமைச்சர்கள், முக்கிய வேட்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

தேர்தல் தேதி ெநருங்குவதால், பூத் அளவில் வாக்குகளை அள்ளுவதில் கையாளக்கூடிய ரகசியங்களை அமித் ஷா நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார். நள்ளிரவில் கூட்டம் நடந்ததால் பாஜ வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



மத்திய பிரதேசத்தில் பாஜ கட்சி, கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து இருமுறை மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு வரும் 28ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜ கட்சியும், ஆட்சியைப் பாஜவிடம் இருந்து கைப்பற்ற காங்கிரசும் கடுமையாக முயற்சித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


‘ராவை’ முதல்வராக்குங்கள். . ! கட்சி நிர்வாகி தற்கொலை

தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் களத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி, காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியை அப்புறப்படுத்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும், அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகி குருவப்பா என்பவர், நிஸாம்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்துகொண்ட குருவப்பாவின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தில், ‘சந்திரசேகர ராவை மீண்டும் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘எம்எல்ஏ விவேகானந்தாவையும் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சி நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சச்சினுக்கு எதிராக யூனிஸ் ராஜஸ்தான் காங். கலக்கம்
 
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், திடீர் திருப்பமாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு எதிராக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அமைச்சர் யூனிஸ் கானை பாஜ கட்சி களமிறக்கியுள்ளது.

சச்சின் பைலட் போட்டியிடும் டோங் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, சச்சினுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் யூனிஸ் கானை அத்தொகுதி வேட்பாளராக பாஜ அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று பாஜ தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, இந்தத் தொகுதி பாஜ எம்எல்ஏவான அஜீத் சிங் மேத்தாவை வேட்பாளராக பாஜ அறிவித்திருந்தது.



ஆனால், கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சச்சின் பைலட் முதல்வராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.

அவருக்கு எதிராக முஸ்லிம் அமைச்சரை பாஜ களமிறக்கியுள்ளதால், அத்தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அமைச்சர் யூனிஸ் கான், இப்போது தீத்வானா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

பாஜவில் கடைசி நேரம் வரை அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாமல் இருந்தது. பாஜ சார்பில் யூனிஸ் கான் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்.

காங்கிரஸ் சார்பில் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.

பாஜ சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டு, அவர்களில் இருவர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கர் முதல்வர் யார்? தேர்தல் திருவிழா ஓய்ந்தது

சட்டீஸ்கர் மாநிலத்தில் 19 மாவட்டங்களில் இரண்டாவது கட்டமாக 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் 18 தொகுதிகளில் கடந்த 12ம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 65க்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற ஆளும் பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது.

இம்மாநிலத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன் கூட்டணி, மும்முனை போட்டியில் முக்கிய பங்களிப்பை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பலமான தலைவர் இல்லாததால், மாநில தேர்தல் களத்தில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நடக்கும் தேர்தலில், 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி 19,296 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள கரியாபந்த், தம்தாரி, மஹாசுமந்த், கபிர்தாம், ஜாஷ்பூர் மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் ரமண்சிங் தேர்வு செய்யப்படுவாரா, அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா அல்லது முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்பது வாக்காளர்களின் முடிவில் உள்ளது.

பாஜவின் மாற்று திட்டம்! மிசோரம் காங்.

மறுப்பு

மிசோரம் மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில், 7 மாநிலங்களில் பாஜ கட்சி ஆட்சியைப்  பிடித்தது போல், இந்த மாநிலத்தையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை பாஜ கட்சி வகுத்து வருகிறது. அதன்படி, ‘முதல்வர் தன்ஹாவ்லா உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் என பலரும் பாஜ கட்சிக்கு வர தயாராக இருப்பதாக தெரிவித்தனர்’ என்று, அம்மாநில பாஜ தலைவர் ஹல்னா, கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

 ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இதுகுறித்து ஹல்னா கூறுகையில், ‘‘தேர்தல் முடிவுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியைச் ேசர்ந்த பலர் பாஜ கட்சியில் இணைவர்’ என்று மீண்டும் தெரிவித்தார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில், ஆட்சியைப் கைப்பற்ற மாற்று திட்டத்துடன், பாஜ தலைமை உள்ளதாக, அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எந்த கட்சியில் யார் எங்கே தாவுவார்கள் என்ற நிலையில், இருகட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

.

மூலக்கதை