சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பிய வழக்கு நீதிமன்றத்தில் தாக்கலாகும் அறிக்கை கசிவது எப்படி?: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பிய வழக்கு நீதிமன்றத்தில் தாக்கலாகும் அறிக்கை கசிவது எப்படி?: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு காட்டம்

புதுடெல்லி: மத்திய புலனாய்வுத் துறையில் ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்களை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து சிபிஐ இணை இயக்குனர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குனராகப் பொறுப்பேற்றார்.


இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சிபிஐ, ‘சிபிஐ அமைப்பின் இயக்குனர் பதவியில் அலோக் வர்மா தொடர்கிறார். சிறப்பு இயக்குனர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குனர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் எஸ். கே. கவுல், ஏ. எம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு,  மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் (சிவிசி) அறிக்கையை  அலோக் வர்மா, அட்டர்னி ஜெனரல் கே. கே. வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், ‘அலோக் வர்மாவுக்கு எதிரான சிவிசி அறிக்கை மிகவும் அசாதாரணமானது’ என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தை தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று தெரிவித்தது.

மேலும், ேநற்று (நவ. 19) அலோக் வர்மா தனது பதிலை சீலிட்ட கவரில் அளிக்க வேண்டும் என்றும், விசாரணை இன்று (நவ.

20) நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று தன்னுடைய தரப்பில் இருந்து அலோக் வர்மா பதில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், விசாரணை தொடர்பாக கால அவகாசம் கேட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

அப்போது, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ‘சிவிசி அறிக்கை, அலோக் வர்மா பதில் தொடர்பாக பல விஷயங்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. எப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விபரங்கள் ஊடகங்களுக்கு கசிகிறது.

இது, நீதிமன்ற விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக உள்ளது’ என்று காட்டத்துடன் தெரிவித்தனர். பின்னர், அலோக் வர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், ‘‘வழக்கு விவகாரங்களை கையாள, உங்களை போல சிறப்பு ஆலோசகர்கள் தேவை.

அதனால் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.

அதைதொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

.

மூலக்கதை