மலேசியா இறக்குமதி மணல் விவகாரம்: டிச.7ல் உச்ச நீதிமன்றம் இறுதி விசாரணை

தினகரன்  தினகரன்
மலேசியா இறக்குமதி மணல் விவகாரம்: டிச.7ல் உச்ச நீதிமன்றம் இறுதி விசாரணை

புதுடெல்லி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணல் தொடர்பான வழக்கு விவகாரத்தில் நவம்பர் 7ம் தேதி இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55ஆயிரம் டன் மணலை லாரிகளில் எடுத்துச்சென்று தமிழகம் முழுவதும் விற்க அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவில்,\'தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்றும், புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது, ஜல்லியை தவிர்த்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும் என தனி நீதிபதி வழங்கிய உத்தரவையே பின்னர் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதிசெய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதீமன்றம் மணலுக்கு உண்டான மொத்தத் தொகையை நீதிமன்றத்தில் கட்டுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் 1ம் தேதி மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகை 10கோடியை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவோலையாக செலுத்தியது. இதைத்தொடர்ந்து, மலேசியா இறக்குமதி மணலை எடுத்து விற்பனை செய்ய தமிழக அரசுக்கு தூத்துக்குடி துறைமுகம் அனுமதியளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை 6 வாரத்திற்கு ஒத்திவைத்து கடந்த மாதம் 1ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அப்துல்நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மனு மீதான விசாரணையை அடுத்த தேதிக்கு ஒத்திவைத்து கால அவகாசம் வழங்க கோரப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,\'இறக்குமதி மணல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இறுதி விசாரணை நடக்கும்’’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை