சபரிமலை பாதுகாப்பு பணியில் குளறுபடி : விசாரணை நடத்த டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு

தினகரன்  தினகரன்
சபரிமலை பாதுகாப்பு பணியில் குளறுபடி : விசாரணை நடத்த டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சித்திரை ஆட்டத் திருவிழாவின்போது பாதுகாப்பு பணியில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக கடந்த 5ம் தேதி நடை திறக்கப்பட்டது. இளம் பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சன்னிதானத்தில் முதன் முறையாக 15 பெண் போலீசாரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.எந்த காரணம் கொண்டும் சன்னிதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நடைதிறந்த 5ம் தேதி மாலையில் அஞ்சு என்ற பெண்ணும், 52 வயதான மற்றொரு பெண்ணும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். இதனால் அஞ்சு திரும்பி சென்றார்.அங்கு ஏராளமான விதிமீறல்கள் நடந்தன. இது எதையுமே போலீசாரால் தடுக்க முடியவில்லை. வழக்கமாக 18ம் படி முழுவதும் போலீசார் நின்று படியேறும் பக்தர்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால் சம்பவத்தன்று 18ம் படியில் நின்ற போலீசார் திடீரென மாயமானார்கள். போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது போலீஸ் பாதுகாப்பில் ஏற்பட்ட பெரும் தோல்வியாக கருதப்படுகிறது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த டிஜிபிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதையடுத்து கோயிலில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஐஜி அஜித்குமாரை அழைத்த டிஜிபி, சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை