சுப்ரீம் கோர்ட்டில்.4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். இதன் மூலம், நீதிபதிகள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 4 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் 30ம் தேதி பரிந்துரைத்தது. 

இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கு ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 
ஹேமந்த் குப்தா மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுபாஷ் ரெட்டி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், எம்.ஆர்.ஷா பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அஜய் ரஸ்தோகி திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிவர்கள்.

 இவர்கள் பதவியேற்றதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகளின் எண்ணிக்கை 24ல் இருந்து 28 ஆக உயர்ந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில், இந்த ஆண்டு இறுதியில் நீதிபதிகள் லோகூர், குரியன் ஜோசப் இருவரும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி சிக்ரியும் ஓய்வு பெற உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை நிரந்தரம் செய்து ஜனாதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து 3 பேருக்கும் தலைமை நீதிபதி தாஹில் ரமானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக டீக்காராமன், சதீஷ்குமார், சேஷசாயி ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். 2 ஆண்டுகள் அவர்கள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றினர். 

இதையடுத்து, அவர்களை நிரந்தரம் செய்யும் உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  பிறப்பித்து உள்ளார். நிரந்தரம் செய்யப்பட்ட 3 நீதிபதிகளும்  தலைமை நீதிபதி தாஹில் ரமானி அறையில் பதவியேற்றனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், மூத்த வக்கீல்கள் மற்றும் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்

மூலக்கதை