துணிக்கடைகள்-வணிக நிறுவன ஊழியர்கள் உட்கார்ந்த படியே வேலை செய்ய அனுமதிக்கும் கேரள அரசின் அவசர சட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கும் அனுமதியை வழங்கும் வகையில் அவசரச் சட்டம் கேரள அரசால் இயற்றப்பட்டு உள்ளது.


நாட்டிலேயே இது முன்மாதிரியான சட்டம் என பாராட்டைப் பெற்று உள்ளது. இந்தச் சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது.

1960-ம் வருடத்திய 'கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்கு சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்வதற்கு அனுமதி கிடையாது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம் கழிவறைக்கு செல்லக் கூட அனுமதி கிடைப்பது இல்லை. 

வாடிக்கையாளர் இல்லாத நேரத்திலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் பல ஊழியர்கள் உடல் நல பாதிப்புக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளானார்கள்.
இந்த நிலையில் பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேரளாவில் பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு கேரள மாநில ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்து உள்ளது. புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் உட்கார்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு, மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 1960ஆம் ஆண்டு சட்டத்தின் 29வது பிரிவின்படி முதல் முறை விதி மீறும்போது, 5,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை அபராதமும், இரண்டாவது முறை விதி மீறும் போது பத்தாயிரம் ரூபாயும், தொடர்ந்து விதிமுறையை மீறும்போது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய சட்ட மசோதா, பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை அளிக்கவும் வழிவகை செய்து உள்ளது. ஆனால், 5 பேர் கொண்ட குழுவில் 2 பேராவது பெண்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

மூலக்கதை