சபரிமலையில் மண்டல பூஜை: 5000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் 5 ஆயிரம் போலீசாரைபாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா தலைமை வகித்தார். கூட்டத்தில் மண்டல காலத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு 5000 போலீசாரை  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானம் செய்யப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநில  போலீசாரையும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையில் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல பூஜைகள் தொடங்குகின்றன.  இதையொட்டி தமிழ்நாடு, கர்நாடகா,  ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தென் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கேரள முதல்வர்  பினராய் விஜயன் திட்டமிட்டுள்ளார். இதன்படி அக்டோபர் 31ம் தேதி திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள வரும்படி தென்மாநில முதல்வர்களுக்கு  கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார்.

சபரிமலை கோயில் விவகாரத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதாக கேரளாவில் 1407 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 210  பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டிருந்தனர். 

இதில் பத்தனம்திட்டா ஆயுதப்படை முகாமில் பணிபுரியும் இப்ராகீம் குட்டி என்ற போலீஸ்காரர் படமும் வெளியானது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீசின் சைபர் செல் பிரிவில் ஏற்பட்ட தவறால் போலீஸ்காரர் புகைப்படம் வெளியானதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை