கோவையில் 100 செ.மீ., மழை?

தினமலர்  தினமலர்
கோவையில் 100 செ.மீ., மழை?

கோவை :கோவையில், இந்தாண்டு, 100 செ.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத்தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது : பொதுவாக, கோவையில், அக்., - டிச., மாதங்களில் சராசரியாக, 33 செ.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய, 14.6 செ.மீ., மழையில், தற்போது வரை, 13.6 செ.மீ., மழை கிடைத்துள்ளது. கோவையில், ஆண்டுக்கு, 46 மழை பொழிவுகள் கிடைக்கும். இந்தாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதம், 10 நாட்கள் உள்ள நிலையில், தற்போது வரை, 56 மழை பொழிவுகள் கிடைத்துள்ளன. ஆண்டு சராசரி மழையாக, 67.4 செ.மீ., எதிர்பார்த்த நிலையில், தற்போது, 76.4 செ.மீ., மழை கிடைத்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், இந்தாண்டு, 100 செ.மீ., மழையளவு கிடைக்க வாய்ப்புள்ளது. கோவையில், இன்றும், நாளையும் லேசான மற்றும் கனமழை பெய்யக்கூடும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை