நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் வரி செலுத்துவது தான்! வெங்கையா நாயுடு பேச்சு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் வரி செலுத்துவது தான்! வெங்கையா நாயுடு பேச்சு!

நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் வரி செலுத்துவது தான் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

கோவையில், இந்திய தொழில் வர்த்தக சபையின் (சேம்பர்) 90வது ஆண்டு விழா  நடந்தது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு தபால்உறை வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது:

"நான் தற்போது எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சொந்தமானவன். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டபோதும் மக்கள் சேவையில் ஓய்வுபெறவில்லை. கோவை, திருப்பூர் நகரங்களில் ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு தொழில் சிறப்பாக நடக்கிறது. 

மக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஸ்மார்ட்சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் மக்களின் பங்களிப்பை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும். 

கோவை, திருப்பூர் நகரங்களில் தொழில்முனைவோர் மற்றும் அறிவுத்திறன் நிறைந்தவர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், தொழில் துறையில் இம்மாவட்டங்கள் முன்னோடியாக இருக்கின்றன. இம்மாவட்ட மக்கள் கடினமாக உழைக்கின்றனர்.

உலக அளவில் தற்போது  காலநிலை மாற்றம் என்பது பெரும் சவாலாக உள்ளது. கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையிலும், அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாகத்தான் நிலத்தடி நீர்மட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது.

இயற்கை மீது அன்பு செலுத்த வேண்டும். இயற்கையை பாதுகாப்பது நம் கடமை. ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது, துவக்கத்தில் பல பிரச்னை இருந்தாலும், தற்போது நல்ல பலனை அளித்துள்ளது. ஜி.எஸ்.டியால்தான் நாடு முழுவதும் வரி சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்துவதுதான் அடித்தளம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் முகவரியுடன் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

நாட்டில் தற்போதும் தீண்டாமை இருந்து வருகிறது. 20 சதவீத மக்கள் வருமானம் இல்லாமலும், 25 சதவீத மக்கள் கல்வி அறிவு பெறாமலும் உள்ளனர். இதனை மாற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஊழல், முறைகேடு நாட்டின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. ஊழலை ஒழித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும்.கோவையில் இருந்து வெளி நகரம் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிப்பது தொடர்பாக இந்திய வர்த்தக சபை சில கோரிக்கை வைத்துள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு  வெங்கையா நாயுடு பேசினார்.

மூலக்கதை