கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு சிறையில் பிஷப்புக்கு கைதி எண் 5968

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு சிறையில் பிஷப்புக்கு கைதி எண் 5968

கோட்டயம்: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு, பாலா கிளைச்சிறையில் கைதி எண் 5968 வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரை, வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குரவிலாங்காட்டை சேர்ந்த ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக, அவரை கடந்த 21ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர், பாலா குற்றவியல் நடுவர் லட்சுமி முன்பாக ஆஜர்படுத்தி 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று அவரை போலீசார் மாஜிஸ்திரேட்டு லட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை அக்டோபர் 6ம் தேதி வரை, பாலா கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முன்னதாக, அவரை போலீசார் பாலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை முடிந்ததும் பிஷப் பிராங்கோவை போலீசார் பாலா கிளை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: கைது  செய்யப்பட்ட பிஷப் பிராங்கோ, இன்று (நேற்று) மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மதியம் 2. 25 மணி வாக்கில் நீதிமன்ற காவலுக்காக, பாலா சிறைக்கு கொண்டு வந்தனர். அவர் மதியம் சாப்பிடாததால், மீன் குழம்புடன் அரிசி சாதம் வழங்கப்பட்டது.

சிறை எண் 3ல் அடைக்கப்பட்ட அவருக்கு, கைதிக்கான அடையாள எண்ணாக 5968 என்ற எண் கொடுக்கப்பட்டது.

விசாரணை கைதி என்பதால், அவருக்கு தண்டனை கைதிக்கு உள்ளது போல் கடுமையான விதிமுறைகள் இல்லை.

அவர் விருப்பப்படி உடைகளை அணிந்து கொள்ளலாம். அவர், குர்தா, பைஜாமா போன்ற ஆடைகளை கொண்டு வந்துள்ளார்.

அவர் அடைக்கப்பட்டுள்ள சிறையில், இரு கைதிகள் உள்ளனர். ஒருவர் குடிபோதையில் தகராறு செய்தவர், மற்றொருவர் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

பிஷப், சாதாரணமாக இருக்கிறார். தனக்காக சிறப்பு வசதிகள் ஏதும் கோரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை