பாஜ அமைச்சர் மீது ‘செக்ஸ்’ சிடி புகார் வழக்கு: சட்டீஸ்கர் மாநில காங். தலைவர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ அமைச்சர் மீது ‘செக்ஸ்’ சிடி புகார் வழக்கு: சட்டீஸ்கர் மாநில காங். தலைவர் கைது

புதுடெல்லி: சட்டீஸ்கரில் பாஜ அமைச்சர் மீது செக்ஸ் சிடி புகார் தெரிவித்த வழக்கு தொடர்பாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபை நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் இருந்து கொண்டு ‘ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்டா’க பல்வேறு ஊடகங்களில் எழுதி வந்த பத்திரிகையாளர் வினோத் வர்மாவை, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில், சட்டீஸ்கர் மாநில போலீசார் கைது செய்தனர். அவர் மீது, மிரட்டிப் பணம் பறித்தல், அச்சுறுத்தல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர், சட்டீஸ்கர் மாநில சமூகப் பிரச்சினைகள் குறித்து நீண்ட காலமாக எழுதி  வந்தார். இப்போது, காங்கிரஸ் கட்சியில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

மேலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹெலின்  உறவினர் எனக்கூறப்படுகிறது.

இவர் கைதான போது சட்டீஸ்கர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘என்னிடம் சட்டீஸ்கர் மாநில அமைச்சர் ராஜேஸ் முனௌத்தின் பாலியல் புகார் தொடர்பான சிடி ஒன்று உள்ளது என்பதால், என் மீதுள்ள அதிருப்தியில் என்னைக் கைது செய்ய முயற்சி செய்தனர். நான் வெறுமனே எழுதத்தான் செய்கிறேன்.

என்னிடம் சிடி எல்லாம் இல்லை’ என்று தெரிவித்தார். ஆனால், அவரது வீட்டுக்கு சோதனைக்குச் சென்ற போலீசார், அவரது வீட்டில் இருந்து அதிகளவில் ஆபாச மற்றும் பிளாக் மெயில் சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வினோத் வர்மா கைதுக்கு அடுத்த சில நாட்களில், அம்மாநில பாஜ முதல்வர் ராமன்சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘சட்டீஸ்கர் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜேஷ் முனோத்  தொடர்புடைய ஆபாச சிடி விவகார வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு  பரிந்துரைத்துள்ளது’ என்று, வருவாய்த் துறை அமைச்சர் பிரேம் பிரகாஷ் பாண்டே கூறினார். மேலும், அவர் அப்போது கூறுகையில், ‘போலீசார் கைப்பற்றிய வீடியோ போலியானது.

காங்கிரஸ் கட்சி இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளது. இது அரசியல் மற்றும் கிரிமினல் சதியாக இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது’ என்றார்.

இந்த விவகாரத்தில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹெல் மீது, அமைச்சர் ராஜேஸ் கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ெதாடர்ந்து, இவ்வழக்குமீது ராய்ப்பூர் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும்நிலையில், சிபிஐ தரப்பில் தாக்கல் ெசய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், முன்னாள் பத்திரிகையாளர் வினோத் வர்மா, காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹெல்  உள்ளிட்ட 4 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹெலை சிபிஐ போலீசார் கைது செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, பூபேஷ் பாஹெல் கூறுகையில், ‘மாநிலத்தில் ஆளும் பாஜ அரசு, எங்கள் கட்சி ெதாண்டர்களை ராகுல்காந்தி வந்தபோது தாக்கியது. என்மீது ெதாடரப்பட்ட வழக்கு போலியானது.

வரும் சில மாதங்களில் மாநிலத்தில் சட்டசபை ேதர்தல் நடக்கவுள்ளதால், நான் தற்போது கைது செய்யப்பட்டது ஆகியவற்றை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். அவர்கள், இந்த அரசுக்கு இறுதி முடிவு எடுப்பர்’ என்றார்.

இதுகுறித்து, முதல்வர் ராமன்சிங் கூறுகையில், ‘மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது. குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் உள்ளதின் அடிப்படையில், சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது’ என்றார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் டிசம்பர் வாக்கில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் யோகி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தொகுதி பட்டியலையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை