'ரபேல்' ஒப்பந்த விவகாரம்; ராகுல் மீண்டும் தாக்குதல்

தினமலர்  தினமலர்
ரபேல் ஒப்பந்த விவகாரம்; ராகுல் மீண்டும் தாக்குதல்

அமேதி : பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும், காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை, மீண்டும் விமர்சித்துள்ளார்.

ஊழல் :

விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து, இந்த விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

இந்த விமானங்களை வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அக்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து, பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.

ரூ.20,000 கோடி:

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, உத்தர பிரதேசத்தில் உள்ள, தன் சொந்த தொகுதியான, அமேதிக்கு, ராகுல் நேற்று சென்றார்.

இங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. நாட்டின் காவல்காரன் என கூறும் பிரதமர் மோடி, ஏழை எளிய மக்கள், ராணுவ வீரர்களிடம் இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளார். அதை, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார்.

மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, ஏழை எளிய மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அதே நேரத்தில், அம்பானி, விஜய் மல்லையா போன்றவர்களே பலனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை