பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் அருண் ஜேட்லி

தினகரன்  தினகரன்
பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் அருண் ஜேட்லி

டெல்லி: பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுத் துறை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பொது வங்கிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆலோசனை வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாராக் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது. இதனையடுத்து பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வங்கிகளை வாராக்கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. 2017-2018-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.87,357 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.12,283 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவற்றின் இணைப்பால், நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவெடுக்கும் என்றும் இணைப்பு நடவடிக்கை முடிவடைய ஓராண்டு ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வங்கிகளை இணைப்பதால், வாராக் கடன்களை வசூலித்து விட முடியாது. ஆகவே, இணைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை