ராகுல்-ஹாலண்டே இடையே ரகசிய தொடர்பு ரபேல் ஒப்பந்தம் ரத்தாகாது: அருண் ஜெட்லி பரபரப்பு பதிலடி

தினகரன்  தினகரன்
ராகுல்ஹாலண்டே இடையே ரகசிய தொடர்பு ரபேல் ஒப்பந்தம் ரத்தாகாது: அருண் ஜெட்லி பரபரப்பு பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே இடையே ரகசிய தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பி உள்ள மத்திய  நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை’’ என பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பாகி உள்ளது.‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அரசுதான் காரணம்’ என பிரான்சின்  முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய  பொருளாதாரத்தில் பிரதமர் மோடி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தி இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.பூதாகரமாக வெடித்துள்ள இவ்விவகாரம் குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஆச்சரியமாக இருக்கிறது...  ரபேல் விவகாரத்தில் பிரான்சில் குண்டு வெடிக்கப் போகிறது’ என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து ஹாலண்டே  சர்ச்சைக்குரிய கருத்தை கூறி, பின்னர் அவரே தனது கருத்துக்கு முரண்பாடாக பேசியிருக்கிறார். ஹாலண்டே பேசப்போவது ராகுலுக்கு எப்படி தெரிந்தது? இந்த  தொடர்புக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை கிளப்புகிறது. என்னமோ நடந்திருக்கிறது. அதனால்தான், 20 நாட்கள்  முன்பாகவே ராகுலால் சரியாக கணித்திருக்க முடிந்திருக்கிறது’’ என கூறியிருக்கிறார்.‘2019ல் மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், சர்ச்சையாகி உள்ள ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வாய்ப்புண்டா?’ என்ற கேள்விக்கு அவர்,  ‘‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை.  நமது பாதுகாப்பு படைக்கு இவ்விமானங்கள் அவசியத் தேவையாக உள்ளன. எனவே, நிச்சயம்  வாங்கப்படும்’’ என்றார். இதனிடையே, அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்திலும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்அவர், ‘பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் அடுத்தடுத்த கருத்துகள் முரண்பாடாக உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது என ஹாலண்டே முதலில் கூறினார். ஆனால், பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் இதை கிட்டத்தட்ட மறுத்தன. ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்ததில் தங்களின் பங்கு எதுவுமில்லை என பிரான்ஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கூட்டு தயாரிப்பு திட்டத்தின் கீழ் ரிலையன்சை தாங்கள் தான் சுயமாக தேர்வு செய்ததாக டசால்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன் பின் பேட்டி அளித்த ஹாலண்டே ‘ரிலையன்சுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்ததா அல்லது டசால்ட் நிறுவனம் தனது கூட்டாளியை தானே தேர்வு செய்ததா என்பது எனக்கு தெரியாது. அதை டசால்ட் நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும்’ என கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறார்.  உண்மைக்கு இரு வேறு முகங்கள் இருக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை