சோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா?

தினமலர்  தினமலர்
சோலார் மின் சப்ளை செய்தவர்களுக்கான பணம்... கிடைக்குமா?

சூரிய சக்தி மின்சாரம் சப்ளை செய்தவர்களுக்கு, பல மாதங்களாக பணம் தராமல், மின் வாரியம் அலட்சியம் காட்டி வருவதால், முதலீட்டாளர்கள், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின் வெட்டு பிரச்னையை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதால், மின் துறை அமைச்சர் தங்கமணி, தடுமாறுகிறாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில், 2,141 மெகா வாட் திறனில், பல நிறுவனங்கள், சூரியசக்தி மின் நிலையங்கள்
அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.ஒரு சூரிய சக்தி மின் நிலையத்தின், மொத்த உற்பத்தித் திறனில், ஆண்டுக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளதோ, அது, 'பிளான்ட் யூடிலைசேஷன் பேக்டர்' அல்லது, 'கெப்பாசிட்டி யூடிலைசேஷன் பேக்டர்' என, கூறப்படுகிறது.
சூரிய சக்தியில் இருந்து, பகலில் மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகும். அதுவும், பகலில், காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை தான் அதிகளவு மின்சாரம் கிடைக்கும்; ஆண்டுக்கு, 300 நாட்கள் தான் மின்சாரம் கிடைக்கும்.அதனால், ஒரு மெகாவாட் திறனுள்ள, சூரிய சக்தி மின் நிலையத்தில் இருந்து, ஆண்டுக்கு கிடைக்கும் மின்சாரத்தின் சராசரி அளவு, 19 சதவீதம் என, கணக்கிடப்பட்டுள்ளது.

20 சதவீதம்



இருப்பினும், சூரியசக்தி தகடுகளை, முறையாக சுத்தம் செய்வது, சூரியன் நகரும் திசைக்கு ஏற்ப, 'மோட்டார்' வாயிலாக, தகடுகளை திருப்புவது போன்ற தொழில்நுட்பங்களை பின்பற்றுதல்; மழை சீசனின் போது, போதிய மழை பெய்யவில்லை எனில், கூடுதலாக, வெயில் இருக்கும். இவற்றால், 20 சதவீதம் வரை மின்சாரம் கிடைக்கிறது.இதன்படி, தமிழகத்தில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, 19 சதவீதத்துடன், கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தையும், மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
ஆனால், 19 சதவீதத்திற்கு மட்டுமே பணம் தர முடியும் என்றும், கூடுதலாக எடுத்த மின்சாரத்திற்கு பணம் தர முடியாது என்றும், மின் வாரியம் முரண்டு பிடிக்கிறது.இந்தப் பிரச்னையாலும், சூரியசக்தி மின்சாரம் வாங்கியதற்கு, பல மாதங்களாக, பணமும் தராமல் இழுத்தடிப்பதாலும்,
முதலீட்டாளர்கள், அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், தமிழக அரசு, அத்திட்டத்தை ஊக்குவிக்க, முழு வீச்சில் செயல்படவில்லை. மத்தியில், 2014ல், பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், சூரியசக்தி மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில், 2014 - 15ல், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம் வாங்கும், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு, 7.01 ரூபாய் என, ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம்
நிர்ணயித்தது.

முதலீட்டு செலவு



அடுத்த ஆண்டிலும், அதே விலை இருந்தது. அப்போது, ஒரு மெகா வாட் மின் நிலையத்தின் முதலீட்டு செலவு, ஏழு கோடி ரூபாய்.அதே நேரத்தில், சூரிய சக்தி மின்சாரம் சப்ளை செய்ய, மின் வாரியத்துடன் தனியார் நிறுவனங்கள், மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தபோது, ஆண்டுக்கு, 19 சதவீத மின்சாரத்திற்கு மட்டுமே, பணம் தரப்படும்; கூடுதல் மின்சாரத்திற்கு பணம் தர
முடியாது என்றெல்லாம், எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
மின் வாரியமும், நிர்ணயித்த அளவை விட கூடுதலாக உற்பத்தியான மின்சாரத்தை வாங்கியது. அதை, மின் நுகர்வோரிடம் விற்று, வருவாயும் ஈட்டிஉள்ளது. தற்போது, திடீரென, 19 சதவீத அளவிற்கு மட்டுமே பணம் தரப்படும், கூடுதலாக வாங்கிய மின்சாரத்திற்கு, பணம் தர முடியாது என, மின் வாரியம் கூறுகிறது.மின் வாரியத்தின் செயலை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
அதை விசாரித்த நீதிமன்றம், 'தமிழகத்தில், மின் தட்டுப்பாடு நிலவுவதால், சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும், கூடுதல் மின்சாரத்தை பெற்று கொள்ள வேண்டும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தது.அதனால், இனியாவது, மின் வாரியம், வீம்பு பிடித்து, உச்ச நீதிமன்றம் செல்லாமல், கூடுதலாக பெற்ற மின்சாரத்திற்கு, விலையை கொடுத்து, முதலீட்டாளர்களுக்கு உதவ வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால், இந்த தொழிலில், எந்த முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய முன்
வரமாட்டார்கள்ஏற்கனவே, அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னையால், பெட்ரோல் விலை, 90 ரூபாயை நெருங்கி விட்டது. தற்போது, நமக்கு தேவையான, பெட்ரோல்,
டீசலை, 85 சதவீதம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.மரபுசாரா மின்சாரத்தை ஊக்கப்படுத்தவில்லை எனில், இனி வரும் காலங்களில், தேவைப்படும் அதிக மின்சாரத்திற்கு, வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். அரசு மற்றும் உயரதிகாரிகள், கவுரவம் பார்க்காமல், நாட்டின் பொது நலன் கருதி, மரபுசாரா மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.

அவகாசம்



மின் கொள்முதல் ஒப்பந்தப்படி, மின்சாரம் வாங்குவதற்கான பணத்தை வழங்க, இரு மாதங்கள், அவகாசம் உள்ளன. பின், 61வது நாளில், பணம் கொடுத்து விட வேண்டும். இல்லையெனில், மின் வாரியம், பணம் தர தாமதிக்கும், ஒவ்வொரு நாளுக்கும், 12 சதவீதம் வட்டியுடன் சேர்த்து, பணத்தை வழங்க வேண்டும்.
ஆனால், மின் வாரியம், எட்டு மாதங்களுக்கு மேலாக பணம் தராமல், பலருக்கும், 750 கோடி ரூபாய்க்கு மேல், நிலுவை வைத்துள்ளது. வங்கிகளில், கடன் வாங்கி தொழில் செய்து வருவோர், அதில், கிடைக்கும் லாபத்தில், வரிச்சலுகையை எதிர்பார்த்து, தமிழகத்தில், சூரியசக்தி மின் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். இதற்காகவும், கூடுதல் கடன் வாங்கியுள்ளனர்.
கடனுக்கு வட்டி மற்றும் அசல் தொகையின் தவணையை, மாதம்தோறும், குறிப்பிட்ட தேதியில், வங்கிகளில் செலுத்த வேண்டும். ஆனால், மின் வாரியம், குறித்த காலத்தில், பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறது.தற்போது, ஒவ்வொரு முதலீட்டாளரிடமும், நிலுவை தொகையில், 2 சதவீத தள்ளுபடி போக, மீதியை வாங்கி கொள்ளுமாறும், நிலுவை பணத்திற்கு, வட்டி கேட்க மாட்டோம் என, எழுதி தரும்படியும், மின் வாரியம் கேட்கிறது.

முடங்கும்


பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெரிய நிறுவனங்கள் மற்றும் குறைந்த வட்டியில், வெளிநாடுகளில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், மின் வாரிய விருப்பத்தை ஏற்று, நிலுவை பணத்தை, தள்ளுபடியுடன் பெற்றுக் கொள்கின்றன. இதனால், அந்நிறுவனங்களுக்கு, எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், வங்கியில் கடன் வாங்கி, முதலீடு செய்துள்ள சிறு நிறுவனங்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரிச்சலுகையை எதிர்பார்த்து, முதலீடு செய்தவர்களுக்கு, இரு தொழில்களும் முடங்கும் நிலை உருவாகிஉள்ளது.
சூரியசக்தி மின் நிலையங்களில், 19 சதவீத அளவை விட, கூடுதலாக எடுத்த மின்சாரத்திற்கு பணம் தருவதுடன், நிலுவையில் உள்ள பணத்தையும், மின் வாரியம் உடனே வழங்க வேண்டும். இல்லையெனில், முதலீட்டாளர்கள் பாதிப்பதுடன், புதிய முதலீடுகளும், தமிழகத்திற்கு வராது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை