சட்டீஸ்கரில் பாஜ - காங். அல்லாத கூட்டணி அமைப்பு மூன்றாவது அணிக்கு மாயாவதி அடித்தளம்: மக்களவை தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்குகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டீஸ்கரில் பாஜ  காங். அல்லாத கூட்டணி அமைப்பு மூன்றாவது அணிக்கு மாயாவதி அடித்தளம்: மக்களவை தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்குகிறது

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில், பாஜ - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணியை மாயாவதி அமைத்துள்ளதால், வரும் மக்களவை தேர்தலில் மூன்றாவது அணிக்கு அடித்தளத்தை அவர் அமைத்துள்ளார். அதன் பின்னணியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

வருகிற டிசம்பர் வாக்கில் பாஜ ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், காங்கிரஸ் ஆளும் மிேசாரம், தேர்தலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி ஆண்ட தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை ேதர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு மே மாதம் வாக்கில் நடக்கும் மக்களவை ேதர்தலுக்கான கட்சிகளின் வெற்றிவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.


மத்தியில் ஆளும் பாஜ அரசு, மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கூட்டணி அமைத்தில் உள்ளிட்ட எல்லாவித அரசியல் முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், பாஜ ஆட்சியை அப்புறப்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய அளவில் மூன்றாவது அணி என்று ஒன்று அமையக்கூடாது என்றும், அவ்வாறு அமைந்தால் அது பாஜ கட்சிக்கு சாதகமாகிவிடும் என்பதால், சில கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் நிர்பந்தத்தின் பேரில் கூட்டணி அமைத்துள்ளன.

அதேநேரத்தில், காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும், அந்த கட்சியிடம் இருந்து அதன் தலைவர் ராகுல்காந்தியை முன்னிலை படுத்துவதா அல்லது மாற்றுத்திட்டமா என்பது குறித்து முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை.

இருந்தும், அதிக இடங்களை பிடிக்கும் கட்சிக்கு பிரதமர் பதவி என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கவுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் (காங்கிரஸ் கட்சியின் முதல்வராக முன்பு பதவியில் இருந்தவர்) கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அந்த மாநிலத்தின் மும்முனை போட்டி நிலவுவதால் அது ஆளும் பாஜவுக்கு சாகதகமாகும் என்றே தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் வலிமையாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டது.

இதன் மூலம் பாஜவை வீழ்த்த இருகட்சிகளும் முயன்றன. ஆனால் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் விடப்பிடியாக இருப்பதாக மாயாவதி புகார் கூறினார்.

இதனால், மத்திய பிரதேசத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் உள்ளது. இதற்கிடையே, சட்டீஸ்கரில், அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைத்து மாயாவதி தொகுதிப்பங்கீடு பட்டியலையும், ராய்ப்பூரில் ெவளியிட்டார்.

அதன்படி, ‘சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ் 55 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 35 இடங்களிலும் போட்டியிடும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல்வராக பதவி ஏற்பார்’ என்று அதிரடியாக மாயாவதி அறிவித்தார்.

இதற்கு, பதிலளித்த மாநில காங்கிரஸ் தலைவர் பூபக் பாகேல் கூறுகையில், ‘‘அஜித் யோகியுடன் கூட்டணி அமைத்துள்ள மாயாவதிக்கு பின்னணியில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இருக்கிறது. இந்த கூட்டணி பாஜ கட்சியின் ‘பி’ டீம்’’ என்றார்.



இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள மாயாவதி, அங்கு 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். இதன் மூலம் வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது அணியை அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி முயன்று வருவதாகவும், அதை உறுதிபடுத்தும் வகையில் சட்டீஸ்கரில் மாயாவதி உறுதிபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது அணி தொடர்பாக இடதுசாரிகள், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ், பாஜ கட்சிகளை எதிர்க்கும் பிற மதசார்பற்ற கட்சிகளுடன், பகுஜன் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கையால் மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி, மூன்றாவது அணி உருவானால் மாநில கட்சிகளின் கை ஓங்க வாய்ப்புள்ளதாகவும், அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

.

மூலக்கதை