மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரை விடுவிக்க கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரை விடுவிக்க கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பீமா - கோரேகாவ் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரை விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகேயுள்ள பீமா-கோரேகாவ் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.  இங்கு நடந்த கருத்தரங்கில் பேசியவர்களின் தூண்டுதல் பேச்சால்தான் இந்த கலவரம் நடந்தது என மகாராஷ்டிரா போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்த வன்முறையில் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. அவர்கள் பிரதமர் மோடியை கொல்ல சதிதிட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 மாநிலங்களில் கடந்த மாதம் 28ம் தேதி, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஐதராபாத்தில் இடதுசாரி சிந்தனையாளரும் எழுத்தாளருமான வரவர ராவ், மும்பையில் உள்ள சமூக ஆர்வலர்கள் வெர்னான் கான்சல்வஸ், அருண் பெரெய்ரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், ெடல்லியில் வசிக்கும் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவல்கா ஆகிய 5 ேபர் சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். புனே போலீசாரின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தனித்தனியாக மனுக்கள் தாக்கல் ெசய்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ‘கைதானவர்களுக்கு  மாவோயிஸ்ட், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் தொடர்புள்ளதற்கான ஆதாரங்களும், முக்கிய அரசியல் தலைவர்களை கொல்ல சதிதிட்டம் தீட்டியதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. எனவே, இவர்களை 15  நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்  வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி நடந்த விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஆனந்த் குரோவர், அஸ்வானி குமார் ஆகியோர் வாதிடுகையில், ‘‘இது, ஜோடிக்கப்பட்ட வழக்கு. மனித உரிமை ஆர்வலர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்றனர். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘இந்த வழக்கை கழுகு பார்வையுடன் உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும். யூகத்தின் அடிப்படையில் தொடரப்படும் வழக்கில், சுதந்திரத்தை தியாகம் செய்ய முடியாது. இந்த வழக்கின் ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என தெரிந்தால் இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும்’’ என்றனர். மேலும்,  விசாரணை அறிக்கை விவரங்களை வரும் 24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

மூலக்கதை