பாகிஸ்தான் பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த வீரர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த வீரர் கைது

புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் பகிர்ந்த எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் அச்சுதானந்த் மிஸ்ரா.

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2016ம் ஆண்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அச்சுதானந்த் மிஸ்ராவுக்கு நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தான் வேலை செய்யும் இடம், அங்கு நடக்கும் ஆலோசனை மற்றும் முகாம், போர்தளவாடங்கள் உள்ளிட்ட விபரங்களை, வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் பாகிஸ்தான் தோழியுடன் பகிர்ந்துள்ளார்.

வீரர் அச்சுதானந்த் மிஸ்ராவின் செயல்பாடுகளை உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீரர் அச்சுதானந்துடன் தொடர்பில் இருந்த பெண், பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏஜெண்ட் என்பது தெரியவந்தது.   எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய ராணுவ நிலைகள், எல்லையோர கிராம மக்கள் மீது தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்துகிறது. எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் துணைபுரிந்து வருகிறது.

இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண்ணுக்கு ராணுவ ரகசியங்களை பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை