விஐபி பாதுகாப்பு, ரபேல் போர் விமானம் வாங்கியதில் மெகா ஊழல்: பாஜ-காங்கிரஸ் கடும் மோதல்...‘சிஏஜி’யிடம் மூத்த தலைவர்கள் இன்று மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஐபி பாதுகாப்பு, ரபேல் போர் விமானம் வாங்கியதில் மெகா ஊழல்: பாஜகாங்கிரஸ் கடும் மோதல்...‘சிஏஜி’யிடம் மூத்த தலைவர்கள் இன்று மனு

புதுடெல்லி: ரபேல் போர் விமானம் வாங்கியதில் மெகா ஊழல் நடந்திருப்பதாக காங்கிரசும், விஐபிக்கள் பாதுகாப்பாக செல்ல வாங்கப்பட்ட விமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாஜவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் டெல்லி அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் மத்திய அரசு மீது மத்திய தணிக்கைத் துறையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகார் அளிக்கின்றனர். மத்திய பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதே, இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு போர் விமானத்தின் விலை ரூ. 526 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.



ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ. 1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை வெளியிட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது.

காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்ததைவிடவும், 9 சதவீதம் குறைவான விலையிலேயே ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்  தான் ஊழல் நடந்தது.

தரமான விமானங்களை பாஜ ஆட்சியில் வாங்க நடவடிக்கை  எடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும்போது, ரபேல் விமானத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.

இதேபோல், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ. கே. அந்தோணி, ‘கடந்த 2000ம் ஆண்டே விமானப்படைக்கு 126 விமானங்கள் வாங்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டது. தற்போது, 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சூழல் அதிகம் மாறியுள்ளது.

மத்திய பாஜ அரசு வெறும் 36 விமானங்கள் மட்டுமே வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. விலை மலிவு என்றால் கூடுதல் விமானங்களை வாங்க வேண்டியது தானே.

அப்படியானால் தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறீர்களா’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் - பாஜ இடையே அனல் பறக்கும் வார்த்தைப்போர் முற்றியுள்ளது.

இதுமட்டுமல்லாது, தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறும் முன், மத்திய  நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக, காங்கிரஸ் கட்சித் தலைவர்  ராகுல்காந்தி கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,  மல்லையாவை நான் சந்திக்கவில்லை; சுத்தமான பொய் என்று, நிதியமைச்சர்  அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரமும், இருகட்சிகளுக்கு இடையே அனல் மோதலை ஏற்படுத்தி உள்ளது.   மேலும், வருகிற டிசம்பர் வாக்கில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை ேதர்தல் மற்றும் அடுத்தாண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பகிங்கிர குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன.

 அதனால், தலைநகர் டெல்லி அரசியலில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு  குறித்து விசாரிக்க  வலியுறுத்தி மத்திய தணிக்கை வாரியத்திடம் (சிஏஜி) இன்று காங்கிரஸ் கட்சி  முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட, ரூ. 3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், இந்தியர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக எஸ். பி. தியாகி உட்பட 35 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

அகஸ்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹூலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் தொடர்பான வழக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிலையில், அவரை அந்த நாட்டில் இருந்து நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கை தற்போது பாஜ அரசு தூசி தட்டத் தொடங்கியுள்ளதோடு, இந்த விவகாரத்தையும் காங்கிரசோடு முடிச்சுப்போட்டு மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் பாதுகாப்பு விமானம் வாங்கியதால் ஊழல் என்று குற்றம்சாட்டியுள்ளது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை