தாலியை கழற்றினால்தான் அனுமதி: அரசு தேர்வு மைய அதிகாரிகள் அடாவடி...தெலங்கானாவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாலியை கழற்றினால்தான் அனுமதி: அரசு தேர்வு மைய அதிகாரிகள் அடாவடி...தெலங்கானாவில் பரபரப்பு

நார்சபூர்: தெலங்கானாவில் அரசு வேலைக்கு ேதர்வு எழுத வந்த திருமணமான பெண் தேர்வர்களின் தாலியை கழற்றும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) சார்பில் கிராம வருவாய் அதிகாரி (டிஆர்ஓ) தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் 700 காலிப் பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு, 2,000 மையங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், நார்சபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, தேர்வு கட்டுப்பாடு என்ற பெயரில், ‘தாலியைக் கழற்றி கொடுத்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும்’ என, ேதர்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 பலரும் இதனை ஏற்க மறுத்து கெஞ்சிய போதும், ‘தாலியைக் கழற்றிய பின்பே தேர்வு எழுத முடியும்’ என்று அதிகாரிகள் கறாராக கூறியதால், தாலியைக் கழற்றி தங்களது கணவரிடம் கொடுத்துவிட்டு, பெண்கள் தேர்வு எழுதச் சென்றனர்.   இந்த ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 290 பெண்கள், தங்களது தாலியைக் கழற்றி கொடுத்துவிட்டு தேர்வு எழுதியதாக தெரியவந்துள்ளது. மனைவி தேர்வு எழுதி முடித்து வெளியே வரும் வரை, கணவன்கள் கையில் தாலியுடன் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு, பல்வேறு தரப்பினரும் ேதர்வு மைய அலுவலர்களின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



.

மூலக்கதை