காலணி வீச்சு விவகாரம்: பெரியாரை அவமானப்படுத்தி விட முடியாது கி.வீரமணி பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
காலணி வீச்சு விவகாரம்: பெரியாரை அவமானப்படுத்தி விட முடியாது கி.வீரமணி பேட்டி

திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 90 வயதை கடந்து கட்சி பணியாற்றி வரும் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் (வயது 96), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு (93), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா (96) மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்த 25 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, க.அன்பழகன், ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்ட 90 வயதை கடந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். உடல்நலக்குறைவால் சங்கரய்யா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்கான விருதை தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுகந்தி பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஆர்.நல்லக் கண்ணு பேசும்போது, ‘மிகப்பெரும் எழுச்சியாக தமிழகம் இன்றைக்கு குறி வைக்கப்படுகிறது. இதை எதிர்த்து போராடக் கூடிய சக்தியை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். எனவே எங்களை போன்ற வயதானவர்களை திரட்டி பாராட்டு விழா நடத்துவதை விட, வாலிபர்களை திரட்டி முன்னணியில் கொண்டுவர வேண்டும்’ என்றார்.

கி.வீரமணி பேசும்போது, ‘தனது மீது காலணி வீசியபோது ஒரு காலணியை தேடி கண்டுபிடித்த பகுத்தறிவு தலைவர் பெரியார். தற்போது பெரியார் அவருடைய பிறந்தநாளில் காலணிவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இன்னும் பலமாக உங்கள் (காலணி வீசியவர்கள்) எதிர்ப்பை காட்டுங்கள். அப்போது தான் எங்கள் மக்களுக்கு உணர்ச்சி வரும். எனவே பெரியார் சிலைக்கு காலணி போட்டவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.’ என்றார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துரை வழங்கினார். துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி பொருளாளர் தர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரியார் திடல் வளாகத்தில் அன்னை நாகம்மையார் அரங்கம் கட்டப்பட்டிருந்தது. அதனை க.அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

முன்னதாக பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் மரியாதை செலுத்தினர். அப்போது கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்து இருக்கிறாரே?

பதில்:- அவர் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது இது முதல் முறை அல்ல. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்பது பயன் அளிக்காது. நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மன்றம் தண்டனை வழங்கும்.

கேள்வி:- சென்னை மற்றும் திருப்பூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருக்கிறதே?

பதில்:- பெரியாரை பொறுத்தவரையில் ஒரு காலணி போட்டால் இன்னொரு காலணி எங்கே? என்று கேட்டு பழக்கப்பட்ட தலைவர். எனவே இந்த சலசலப்புகளால் அவரை அவமானப்படுத்தி விட முடியாது.

இதை எல்லாம் ஏன் இந்த அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. எனவே இத்தகைய ஆட்சிகளுக்கு விடை கொடுப்பது தான் ஒரே வழி. அது தான் பெரியார் பிறந்தநாள் சூளுரை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை