'இ - டிக்கெட்' மோசடி செய்பவர்களை தண்டிக்க ரயில்வே சட்டத்தில் திருத்தம்

தினமலர்  தினமலர்
இ  டிக்கெட் மோசடி செய்பவர்களை தண்டிக்க ரயில்வே சட்டத்தில் திருத்தம்

புதுடில்லி:ரயிலில், 'இ - டிக்கெட்' முன்பதிவில், முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு, சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில்வேயில், இ - டிக்கெட் எனப்படும், கம்ப்யூட்டர் டிக்கெட் முன்பதிவில், அதிக
அளவில் மோசடி நடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வருகின்றன.
சமீபத்தில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த நபர், போலியான, 'சாப்ட்வேர்' எனப்படும், மென்பொருள் மூலம், 'தத்கல்' டிக்கெட் முன்பதிவில், 35 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், சி.பி.ஐ., அதிகாரி ஒருவர், போலி சாப்ட்வேர் மூலம்,
ரயில் முன்பதிவில் மோசடி செய்ததற்காக, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.
இது போன்ற, இ - டிக்கெட் மோசடியில் ஈடுபடுபவர்களை தண்டிக்க, ரயில்வேயில் தனி சட்டங்கள் இல்லை. இவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை, மிக குறைவாக இருப்பதாக, பரவலாக புகார் கூறப்பட்டன.இதையடுத்து, இவர்களை தண்டிப்பதற்காக, ரயில்வே சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இ - டிக்கெட் மோசடியில் ஈடுபடு பவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இந்த சட்ட திருத்த பரிந்துரையை, ரயில்வே வாரியம், ஏற்ற பின், அது நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

மூலக்கதை