மகாராஷ்டிராவில் எம்எல்ஏ ராம்கதம் விவகாரம் அமைச்சரை விமர்சித்த ஆசிரியருக்கு அடி உதை: 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் எம்எல்ஏ ராம்கதம் விவகாரம் அமைச்சரை விமர்சித்த ஆசிரியருக்கு அடி உதை: 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு

புனே: மகாராஷ்டிராவில் அமைச்சர் பங்கஜா முண்டேயை விமர்சித்து கருத்து தெரிவித்த ஆசிரியருக்கு அடி உதை விழுந்தது. மகாராஷ்டிரா பாஜ எம்எல்ஏ ராம் கதம், இளைஞர்கள் விரும்பும் பெண்ணை கடத்தி வந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் பாஜ.வைச் சேர்ந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ராம் கதமுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்த செய்தி சர்கார்நாமா என்ற இணையதள பத்திரிகையில் வெளியாகி இருந்தது. புனே நிக்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் கர்ஹடே என்ற ஆசிரியர் கருத்து தெரிவித்தார். “உங்கள் சகோதரி (பீட் தொகுதி எம்.பி. பிரீதம் முண்டே) இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். அவர் கடத்தப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?’’ என்று பங்கஜா முண்டேக்கு அந்த ஆசிரியர் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 12 பேர் ஆசிரியர் சஞ்சயை சந்தித்து அவரை அடித்து உதைத்தனர். பிறகு  அவரை மன்னிப்பு கேட்க வைத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சஞ்சய் தெரிவித்த கருத்துக்கு அவரிடம் இருந்து விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மூலக்கதை