ராமர் கோயில் விவகாரத்தில் கருத்து ‘உச்சநீதிமன்றம் எங்களுடையது’: உ.பி பாஜ அமைச்சர் சர்ச்சை பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராமர் கோயில் விவகாரத்தில் கருத்து ‘உச்சநீதிமன்றம் எங்களுடையது’: உ.பி பாஜ அமைச்சர் சர்ச்சை பேச்சு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜ கட்சியைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத் துறை அமைச்சராக முகுத் பிஹாரி வர்மா என்பவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் லக்னோவில், அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது எங்கள் தீர்மானங்களுள் ஒன்று.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

எனினும், உச்ச நீதிமன்றம் எங்களுடையது. மேலும், நீதித் துறையும், இந்த நாடும், ராமர் கோயிலும் எங்களுடையது.

உத்தரபிரதேச மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதேநேரத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்பதில் பாஜ கட்சி உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை