இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெள்ள பாதிப்புகளை கண்டுபிடிக்க நிறைய வசதிகள் உள்ள நிலையில் நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை வைத்து எளிதாக பேரிடர்களை முன்கூட்டியே கணித்து அறிவிக்க முடியும், ஆனால் வெள்ளம் வருவதை தடுக்க முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. பேரிடரை முன்கூட்டியே கணித்தாலும் பெரிய அளவில் எந்த மாநில அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் இந்தியாவில் பெரும்பாலான கட்டிடங்கள், சாலைகள், வீடுகள் வெள்ளத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எனவே என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், நகரமயமாக்கல் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மாற்ற வழியே கிடையாது, பெரிய அளவில் நடவடிக்கை எடுத்து வெள்ளத்தை தடுத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கையில் எந்தெந்த மாநிலங்கள் பேரிடர்களை சமாளிக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என்று தெரிவித்துள்ளது. 640 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தர பிரதேசம், உத்தர காண்ட் , பீகார், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு, குஜராத் ஆகியவை நல்ல நிலையில் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாநிலமும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் 47,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இதை தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை