கேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு... நிலச்சரிவு அபாயத்தால் மக்கள் பீதி... வெள்ள அபாய எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு... நிலச்சரிவு அபாயத்தால் மக்கள் பீதி... வெள்ள அபாய எச்சரிக்கை

திருவனந்தபுரம்: வரலாறு காணாத கனமழையால் கேரளாவில் அணைகள் நிரம்பி வருவதையடுத்து பாதுகாப்பு கருதி 22 அணைகளில் இருந்து திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படும் இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,401 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 2,399 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி அணையில் மதகுகள் இல்லாததால் துணை அணையான சிறுதோணி அணையின் ஒரு மதகு மட்டும் நேற்று திறக்கப்பட்டு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இடுக்கி அணையில் பிற்பகலில் மேலும் 2 மதகுகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் சரிவு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டுள்ளனர். மிக உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் பாய்தோடி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் முகத்துவார இடங்களான ஆலுவா மற்றும் எர்ணாகுளத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதே போன்று மாநிலத்தின் மற்ற அணைகளான முல்லைபெரியாறு அணை, இடமழையாறு அணை உள்ளிட்ட 22 அணைகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் அனைத்து ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகிறது.

மூலக்கதை