17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது,..மக்களவை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது,..மக்களவை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

புதுடெல்லி: 17வது நாடாளுமன்ற கூட்டத்ெதாடர் இன்று ெதாடங்கிய நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகர் பதவியேற்றுக் கொண்டார். இந்த அவையில், முன்னாள் பிரதமர்கள், துணை பிரதமர், அமைச்சர் என, பல மூத்த தலைவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜ கட்சி மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வென்றது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கடந்த மே மாதம் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2வது முறையாகப் பதவியேற்றது. பிரதமர் மோடி தலைமையில் 57 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து புதிய மக்களவை இன்று கூடியது.

முன்னதாக ஏற்கனவே மக்களவையின் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்ட பாஜ எம்பி வீரேந்திர குமாருக்கு, இன்று குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இடைக்கால சபாநாயகர், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களுக்கு, இன்றும் நாளையும் அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 19ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

வரும் 20ம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையும் நடைபெறும். முன்னதாக 19ம் தேதி மக்களவைக்கு சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.



இந்த போட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் பெயரை, ஆளுங்கட்சி முன்மொழியலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
ெதாடர்ந்து, ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

ஜூலை 26ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இந்த கூட்டத்தொடரை பொறுத்தவரை, மக்களவையில் 30 அமர்வுகளும், மாநிலங்களவையில் 27 அமர்வுகளும் நடைபெறுகின்றன.

ஏற்கனவே கடந்த 16வது நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் அறிமுகம் செய்யப்பட்ட 46 மசோதாக்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

பாஜ கட்சியை பொறுத்தவரை மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடியும், துணைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை பாஜ தலைவராக மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டும், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இரு அவைகளுக்கான தலைவராக முன்னாள் தலைவரான சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய மக்களவைக்கு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் துணை பிரதமர், முன்னாள் அமைச்சர்கள் என பல மூத்த உறுப்பினர்கள், தேர்தல் மற்றும் வேறு காரணங்களால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகாலம் முடிவு), முன்னாள் பிரதமர் தேவகவுடா (தேர்தலில் தோல்வி), முன்னாள் துணை பிரதமர் அத்வானி (கட்சியில் சீட் தரவில்லை; தேர்தலில் போட்டியிடவில்லை), முன்னாள் அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி (பாஜ), உமா பாரதி (பாஜ), சுஷ்மா சுவராஜ் (பாஜ), மல்லிகார்ஜூன கார்கே (காங். ), 16வது மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் சிந்தியா (தேர்தலில் தோல்வி) உள்ளிட்ட தலைவர்கள் இரு அவைகளுக்கும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி முக்கியம்
மக்களவைக்கு வருகை தந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ‘‘புதிய கனவுகள், புதிய நம்பிக்கையோடு 17வது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாட்டிற்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்

.

மூலக்கதை