7 வது உலக போர் 'சரவெடி'க்கு இந்திய படை 'ரெடி' இன்று பாகிஸ்தானுடன் மோதல்

தினமலர்  தினமலர்
7 வது உலக போர் சரவெடிக்கு இந்திய படை ரெடி இன்று பாகிஸ்தானுடன் மோதல்

மான்செஸ்டர்:உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் மோதல் இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. உலக கோப்பை அரங்கில் கடந்த 6 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றது.


இன்று 7வது முறையாக இரு அணிகளும் மல்லுக்கட்ட உள்ளன. இதில் வழக்கம் போல இந்தியா வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.


இன்று மான்செஸ்டர், ஓல்டுடிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் கிரிக்கெட் உலகின் பரம எதிரிகள் என கூறப்படும் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை முதல் 3 போட்டியில் 2 வெற்றி பெற்றது இந்தியா. ஷிகர் தவான் இடது கை பெருவிரல் காயத்தால் அவதிப்படுவதால் இன்று ரோகித் சர்மாவுடன் (2 போட்டி, 179 ரன்) இணைந்து லோகேஷ் ராகுல் (துவக்க சராசரி 56.00 ரன்) நல்ல துவக்கம் தர வேண்டும்.


மீண்டும் 'நான்கு'


'மிடில் ஆர்டரில்' 3வதாக கேப்டன் கோஹ்லி வரவுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 12 போட்டியில் 2 சதம் அடித்த கோஹ்லி, மீண்டும் அசத்தினால் நல்லது.உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக 4வது இடத்தில் களமிறங்கப் போவது யார் என பெரும் குழப்பம் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் லோகேஷ் ராகுல் விளையாடிய நிலையில், இன்று இவருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் என இருவரில் ஒருவர் வரலாம் எனத் தெரிகிறது.
அடுத்து விக்கெட் கீப்பர் தோனி, அனுபவ ஆட்டத்தை கொடுக்க காத்திருக்கிறார். கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் அதிரடியாக 76 ரன்கள் (43 பந்து) விளாசிய பாண்ட்யா, இன்றும் கைகொடுக்க வேண்டும்.

பும்ரா நம்பிக்கை


வேகப்பந்து வீச்சில் இந்திய அணிக்காக புவனேஷ்வர் குமார், பும்ரா என இருவரும் நம்பிக்கை தரலாம். இரு போட்டிகளில் தலா 5 விக்கெட் சாய்த்த இந்த கூட்டணி, எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க காத்திருக்கிறது. சுழலில் இதுவரை 6 விக்கெட் சாய்த்த சகால், மீண்டும் சாதிப்பார் எனத் தெரிகிறது. இவரது 'சகா' குல்தீப் (1 விக்.,) இன்னும் 'பார்முக்கு' திரும்பாதது பின்னடைவு தான். எனிலும் 'மிடில் ஓவர்களில்' இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்துவது பலம்.

சிக்கலில் பாக்.,



பாகிஸ்தான் அணி 4 போட்டியில் 1ல் மட்டும் வென்றது. 2 போட்டியில் தோற்றது. துவக்க வீரர்கள் பகர் ஜமான் (58), இமாம் உல் ஹக் (99) அணிக்கு சிறப்பான துவக்கம் தரவில்லை. 'மிடில் ஆர்டரில்' பாபர் ஆசம் (115 ரன்), முகமது ஹபீஸ் (146) பலம் சேர்க்கின்றனர்.பின் வரிசையில் கேப்டன் சர்பராஸ் இருந்தாலும் பெரியளவில் சோபிக்க வில்லை. 'சீனியர்' சோயப் மாலிக் (2ல்
8 ரன்) பேட்டிங் மோசமாக உள்ளது.


பவுலிங் பலம்



பவுலிங்கில் எதிர்பார்த்தபடியே முகமது ஆமிர் பிரகாசிக்கத் துவங்கியுள்ளார். இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய இவருக்கு, 'சீனியர்' வகாப் ரியாஸ் (4 விக்.,) நன்கு கைகொடுக்கிறார். ஷகீன் அப்ரிதி, ஹசன் அலியும் அணியில் உள்ளனர். சுழலைப் பொறுத்தவரையில் ஷாதப் கானுடன் (2 விக்.,), சோயப் மாலிக், முகமது ஹபீசும் பந்தை சுழற்றலாம்.

44

இவ்விரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக 'கேட்ச்' செய்த வீரர்கள்
பட்டியலில் இந்தியாவின் அசார் (64ல் 44 'கேட்ச்') முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் அப்ரிதி (30 'கேட்ச்'), இந்தியாவின் சச்சின் (29), டிராவிட் (25) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
131

ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 131 முறை மோதி
உள்ளன. இதில் இந்தியா 54, பாகிஸ்தான் 73 போட்டிகளில் வென்றன. 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
இரு அணிகள் இடையிலான ஒருநாள் மோதலில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் இந்தியாவின் சச்சின், சித்து ஜோடி முதலிடத்தில் உள்ளது. 1996ல் சார்ஜா போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 231 ரன்கள் குவித்தது.

* பாகிஸ்தானின் சயீத் அன்வர், இஜாஜ் அகமது ஜோடி (230 ரன், 3வது விக்கெட், 1998, தாகா) அடுத்து உள்ளது.
19

ஒருநாள் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் பாகிஸ்தானின் இம்ரான் கான் முன்னிலையில் உள்ளார். இவர், 24 போட்டியில் 19 வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

* தற்போதைய இந்திய கேப்டன் கோஹ்லி, 3 போட்டியில் ஒரு வெற்றி, 2 தோல்வியை பெற்றுத் தந்தார்.

69

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 69 போட்டியில் பங்கேற்றார். பாகிஸ்தானின் இன்சமாம், அப்ரிதி தலா 67, இந்தியாவின் அசார், 64 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

79

கடந்த 1978ல் சியால்கோட் ஒருநாள் போட்டியில் 79 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* 1985, சார்ஜா போட்டியில் 87 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டான'பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக மோசமான ஸ்கோரை பெற்றது.

மூலக்கதை