நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி 30ம் தேதி பதவியேற்பு

தினகரன்  தினகரன்
நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி 30ம் தேதி பதவியேற்பு

* ராஷ்டிரபதி பவனில் இரவு 7 மணிக்கு விழா * புதிய அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்புதுடெல்லி: நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.  இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மக்களவை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியாகின. தேர்தல் நடந்த 542 தொகுதிகளில், ஆளும் பா.ஜ கட்சி தனிப்  பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வென்றது.  பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி கட்சிகள்  மொத்தமாக 352 இடங்களை கைப்பற்றியது.  ஐமு கூட்டணி 91 இடங்களிலும், இதர கட்சிகள் 99 இடங்களை வென்றன.இதையடுத்து தே.ஜ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி தேஜ கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த மோடி, தே.ஜ கூட்டணியின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கு அவரும் உடனடியாக ஒப்புதல் வழங்கி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களின் பெயர் பட்டியலையும், பதவி ஏற்கும் தேதி மற்றும் நேர விவரத்தை தெரிவிக்கும்படியும்  கேட்டுக் கொண்டார். இதன்படி, ராஷ்டிரபதி பவனில் வரும் 30ம் தேதி மாலை 7 மணிக்கு பதவி ஏற்பு விழாவை நடத்த தே.ஜ கூட்டணி முடிவு செய்துள்ளது. இந்த தகவல் ராஷ்டிரபதி பவனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  செயலாளர் அசோக் மாலிக் விடுத்துள்ள செய்தியில், ‘‘பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கும், புதிய மத்திய அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மாளிகையில் வரும் 30ம் தேதி மாலை 7 மணிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்’’ என தெரிவித்துள்ளார்.இந்த விழாவில் உலகத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்கிறார்களா என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முறையாக பதவி ஏற்றபோது, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ்  ஷெரீப் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது ராஷ்டிரபதி பவன் வளாகத்தின் திறந்தவெளி பகுதியில் நடந்த விழாவில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது ஜனாதிபதியாக  இருந்த பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். * 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தபின், மீண்டும் பெரும்பான்மையுடன் பிரதமராக பொறுப்பேற்கும் முதல் பா.ஜ தலைவர் மோடி. * இதற்கு முன் இந்த சாதனையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி மட்டுமே படைத்துள்ளனர். * தொடர்ச்சியாக 2 முறை பிரதமர் ஆன சாதனையை,  பா.ஜ கட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயும் படைத்தார். ஆனால், அவரது முதல் ஆட்சி ஒரு ஆண்டு 7 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

மூலக்கதை